வளைகுடா நாடுகள், அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்காலிகமாக நிலவி வந்த அமைதி முற்றிலும் குலைந்து, மீண்டும் போர் வெடித்துள்ளது. உலகின் மிக முக்கிய வர்த்தகப் பாதையான ஹர்முஸ் ஜலசந்தியில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஈரான், அதனைத் தொடர்ந்து ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீதும், அங்குள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீதும் அடுக்கடுக்கான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்திப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்கா - ஈரான் இடையே நேரடிப் போர் மூண்டது. பிராந்தியத்தில் இருந்த அமெரிக்கப் படைத்தளங்களை ஈரான் குறிவைத்த நிலையில், சர்வதேச நாடுகளின் தலையீட்டால் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் தற்காலிக அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது.
தற்காலிக அமைதி நீடித்தாலும் இரு நாடுகளுக்கும் இடையே புகைந்து கொண்டிருந்த பகை, இன்று மீண்டும் வெடித்துள்ளது. உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் இதயமாகக் கருதப்படும் ஹர்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற வணிகச் சரக்குக் கப்பல் ஒன்றின் மீது ஈரான் இராணுவம் இன்று திடீர் தாக்குதல் நடத்தியது.
இதற்குப் பதிலடியாக அமெரிக்கப் படைகளும் ஈரான் இலக்குகள் மீது தாக்குதல் தொடுத்தன. இதனால் ஆத்திரமடைந்த ஈரான், ஹர்முஸ் ஜலசந்தியை ஒட்டுமொத்தமாக மூடுவதாக அறிவித்துள்ளது. இதனால் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் கடல்வழி வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, வளைகுடாப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் கூட்டு நாடுகளைக் குறிவைத்து ஈரான் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஜோர்டான், பஹ்ரைன், குவைத், கத்தார், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 6 முக்கிய வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன்களை ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவப் படைத்தளங்களை பிரதான இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல்கள் அரங்கேறியுள்ளதாகத் தெஹ்ரானில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் இந்த அதிரடித் தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் உச்சக்கட்டப் பதற்றமும், போர் அபாயமும் சூழ்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் இந்தத் தாக்குதலுக்கு எவ்வாறு பதிலடி கொடுக்கப் போகின்றன என்பதைப் பொறுத்தே இப்பிராந்தியத்தின் அடுத்தகட்ட சூழல் அமையும் என்பதால் உலக நாடுகள் யாவும் கவலையுடன் உற்றுநோக்கி வருகின்றன.