“ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிராந்தியமாக அறிவிப்பேன்” - ட்ரம்ப் பேச்சுக்கு ஈரான் கடும் எதிர்ப்பு!
ஈரானை முழுமையாக வீழ்த்திய பிறகு, உலகளவில் எரிபொருள் போக்குவரத்திற்கு முக்கியமான ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிராந்தியமாக அறிவிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த அறிவிப்புக்கு ஈரான் உடனடியாகத் தனது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
நியூயார்க்கில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டிரம்ப், ஈரானை தோற்கடித்த பிறகு ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பகுதியாக அறிவிக்க உள்ளதாகவும், தங்களது கடற்படை முற்றுகையைத் தாண்டி எந்தக் கப்பலும் செல்ல முடியாது என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை உலக நாடுகளுக்குச் செய்யப்படும் ஒரு சிறந்த சேவை என்றும், பெட்ரோல் விலை உயர்வைக் குறித்துக் கவலைப்படாமல் உலக அமைதிக்காக அமெரிக்க மக்கள் இதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
டிரம்பின் பேச்சுக்கு பதிலளித்த ஈரானின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் காசெம் கரிபாபாடி, "ட்வீட் மூலமாகவோ, விமானம் தாங்கி கப்பல்கள் மூலமாகவோ அல்லது தேர்தல் பிரச்சாரப் பேச்சுகள் மூலமாகவோ ஹார்முஸ் நீரிணையைக் கைப்பற்றிவிட முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணை எப்போதும் ஈரானுக்குச் சொந்தமானது என்றும், ஈரானின் உத்தரவின் பேரில் மட்டுமே அது திறக்கப்படும் அல்லது மூடப்படும் என்றும் தெரிவித்த அவர், அமெரிக்காவின் ராணுவ அச்சுறுத்தல்களுக்கு ஈரான் ஒருபோதும் பயப்படாது எனக் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.