“ஊழியர்களைப் பிணைக் கைதிகளாக அமெரிக்கா வைத்துள்ளது” - ஈரான்!
அமெரிக்கக் கடற்படை ஈரானியச் சரக்குக் கப்பலைத் தாக்கிப் பறிமுதல் செய்துள்ளதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்தச் செயல் சர்வதேசச் சட்டங்களை மீறிய 'ஆயுதமேந்திய கடற்கொள்ளை' என ஈரான் வர்ணித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பந்தர் அப்பாஸ் துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த 'டவுஸ்கா' என்ற ஈரானியச் சரக்குக் கப்பலை அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஸ்ப்ரூயன்ஸ் என்ற போர்க்கப்பல் வழிமறித்தது. அமெரிக்காவின் தடையை மீறிச் செல்ல முயன்றதாகக் கூறி, அந்தச் சரக்குக் கப்பலின் இயந்திர அறை (Engine Room) மீது அமெரிக்கப் படை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதனால் கப்பலின் இயக்கம் முடங்கியது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கப்பலில் இறங்கிய அமெரிக்க மரைன் வீரர்கள், கப்பலையும் அதிலிருந்த ஊழியர்களையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஈரானின் 'காதம் அல்-அன்பியா' ராணுவத் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கப்பலில் இருந்த ஊழியர்களை அமெரிக்கா சட்டவிரோதமாகப் பிணைக் கைதிகளாக வைத்துள்ளது. இது ஒரு மனிதாபிமானமற்றச் செயல். பிணைக் கைதிகளாக்கப்பட்டுள்ள ஊழியர்களை உடனடியாக விடுவிக்க ஐ.நா. சபை மற்றும் சர்வதேச கடல்சார் அமைப்புகள் தலையிட வேண்டும். "அமெரிக்காவின் இந்த அராஜகத்திற்கு ஈரான் ராணுவம் மிக விரைவில் தகுந்த பதிலடி கொடுக்கும்" என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "ஈரானியக் கப்பல் எங்களது தடையை மீற முயன்றது; அவர்களுக்கு அது சரியாக அமையவில்லை. தற்போது கப்பல் எங்கள் முழு கட்டுப்பாட்டில் உள்ளது, அதில் என்ன இருக்கிறது என்பதை ஆய்வு செய்து வருகிறோம்" எனப் பதிவிட்டுள்ளார். நாளை நள்ளிரவுடன் தற்காலிகப் போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் நிலையில், இந்தச் சம்பவம் அமைதிப் பேச்சுவார்த்தையைப் பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.