அமெரிக்காவுடனான அமைதி பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறுவோம் - ஈரான் எச்சரிக்கை!
ஹார்முஸ் நீரிணையில் கத்தார் மற்றும் சவூதி அரேபிய எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்காவுடனான அமைதி பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறப் போவதாக ஈரான் நாடு பகீர் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விவகாரம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் கடுமையான போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நீடித்து வந்த போர்ப் பதற்றத்தைத் தணிக்க, இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்ஏற்பட்டு அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய சூழலில், நேற்று ஓமன் கடற்கரை அருகே பெரும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் இருந்து தெற்கு நோக்கி ஓமன் வளைகுடாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த கத்தார் மற்றும் சவூதி அரேபியாவிற்குச் சொந்தமான வணிக எண்ணெய் கப்பல்கள் மீது திடீரென ஏவுகணைகள் பாய்ந்து தாக்கின. இந்தத் தாக்குதலில் கப்பல்கள் பயங்கரமாகத் தீப்பற்றி எரிந்து பலத்த சேதமடைந்தன.
ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் தாங்கள் வகுத்துள்ள கடல்சார் பாதையில் தான் அனைத்துக் கப்பல்களும் செல்ல வேண்டும் என்றும், அந்தப் பாதையைக் கடக்கும் கப்பல்களுக்குச் 'சுங்கக் கட்டணம்' வசூலிக்கப்படும் என்றும் ஈரான் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனை மீறும் கப்பல்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் எனவும் ஈரான் எச்சரித்திருந்தது.
ஈரானின் இந்தத் தன்னிச்சையான சுங்கக் கட்டண விதிமுறையைத் திட்டவட்டமாக எதிர்த்த அமெரிக்கா, தனது கடற்படைப் பாதுகாப்போடு வணிகக் கப்பல்களை ஹார்முஸ் நீரிணை வழியே இயக்க முயற்சி செய்து வருகிறது.
அமெரிக்காவின் இந்த ராணுவப் பாதுகாப்பு நகர்வால் ஆத்திரமடைந்துள்ள ஈரான், அந்தப் பாதுகாப்பு வளையத்தை மீறித் தொடர்ந்து கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. "ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் எங்களது நாட்டின் இறையாண்மையையும், கடல் எல்லையையும் நிலைநாட்டும் சட்டப்பூர்வ முயற்சிகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டு, நிலைமையைக் கெடுத்து வருகிறது" என ஈரான் அரசு கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இந்த ஏவுகணைத் தாக்குதல்களின் தொடர்ச்சியாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வ எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "எங்கள் நாட்டை அச்சுறுத்தும் வகையிலும், ஈரானின் இறையாண்மையைச் சீர்குலைக்கும் வகையிலும் அமெரிக்கா தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தால், அந்த நாட்டுடன் நடைபெற்று வரும் அமைதி பேச்சுவார்த்தையிலிருந்து நாங்கள் வெளியேறுவோம். அதோடு மட்டுமன்றி, எங்களது எல்லையைப் பாதுகாக்க அமெரிக்கா மீது நேரடிப் போர்த் தாக்குதல்களை நடத்தவும் நாங்கள் தயங்க மாட்டோம்" என்று ஈரான் மிகக் காரசாரமாகத் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் காலமான ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளை முன்னிட்டு, ஈரான் தற்காலிகமாக அமைதி பேச்சுவார்த்தைகளில் இருந்து ஒதுங்கியிருந்த சூழலில், இந்த ஏவுகணைத் தாக்குதலும் நேரடிப் போர் எச்சரிக்கையும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தையும், கடல்சார் பாதுகாப்பையும் பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது. உலக நாடுகளின் கடல் எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்யச் சர்வதேசக் கடற்படைப் போலீசார் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் ஓமன் வளைகுடாப் பகுதியில் தங்களது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.