அமெரிக்கா மீண்டும் தாக்கினால் கடும் விளைவுகள் ஏற்படும் - ஈரான் எச்சரிக்கை!
அமெரிக்கா மீண்டும் ராணுவத் தாக்குதலில் ஈடுபட்டால் அதற்கான பதிலடி மிகக் கடுமையாக இருக்கும் என்றும், அமெரிக்கா முதலில் தாக்கும் வரை தாங்கள் காத்திருக்கப் போவதில்லை என்றும் ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாடி அமெரிக்காவுடனான உறவு மற்றும் தற்போதைய போர்ச் சூழல் குறித்துப் பேசுகையில் பின்வரும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
"அமெரிக்காவுடனான உறவில் ராஜதந்திரப் பேச்சுவார்த்தை, பொருளாதார முற்றுகை மற்றும் ராணுவத் தாக்குதல் என மூன்று வகையான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள ஈரான் முழுமையாகத் தயாராக உள்ளது. மீண்டும் ஒரு ராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்காக அமெரிக்கா ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தி கால அவகாசம் பெற முயற்சிக்கிறதோ எனச் சந்தேகிக்கிறோம்."
"ஈரான் ஒன்றும் முற்றுகையிட்டு முடக்குவதற்குக் கியூபா அல்ல; அடிபணிய வைப்பதற்கு வெனிசுலாவும் அல்ல. வான்வழி அல்லது தரைவழி முற்றுகைகள் மூலம் அமெரிக்கப் படைகளால் இதுவரை வெற்றி பெற முடியவில்லை. ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை தொலைதூர இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது."
தற்போதைய சூழ்நிலையைப் போரும் இல்லாமல், அமைதியும் இல்லாமல் இருப்பதாகக் கூற முடியாது என்றும், சட்டரீதியாகப் பார்த்தால் ஈரான் இன்னும் போர் நிலையில்தான் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஈரானின் அணுசக்தி நிலையங்களைச் சர்வதேச அணுசக்தி முகமை ஆய்வு செய்வதற்கும் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. போர் நிரந்தரமாக முடிவுக்கு வந்து, ஈரான் முன்வைக்கும் நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை எந்த ஆய்வுக்கு அனுமதி அளிக்கப்படாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ராஜதந்திர நடவடிக்கைகளை நம்ப முடியாத சூழல் நிலவுவதால், அனைத்து விதமான சவால்களையும் எதிர்கொள்ள ஈரான் தயாராக உள்ளதாகக் காசெம் கரிபாபாடி எச்சரித்துள்ளார்.