ஈரானின் அடுத்த எச்சரிக்கை ... கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், என்விடியா அலுவலங்கள் தான் அடுத்த இலக்கு... பீதியில் உலக நாடுகள்! 

 

 

ஈரான் அடுத்ததாக தாக்குதல் நடத்த இருக்கும்  புதிய இலக்குகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதனால்  மேற்கு ஆசியா முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது. அதன்படி இஸ்ரேல், துபாய், அபுதாபி  பகுதிகளில் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுடன் தொடர்புடைய அலுவலகங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இந்த இலக்குகள் பட்டியலில் கூகிள், அமேசான், மைக்ரோசாப்ட், என்விடியா, ஐபிஎம், ஆரக்கிள்   நிறுவனங்களின் அலுவலகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு முழுவதும் உள்ள டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப மையங்கள் தற்போது அதிக பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை சார்பில் சில தரவு மையங்கள் மீது தாக்குதல்கள் நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பகுதிகளில் உள்ள தரவு மையங்கள் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் பிராந்திய மோதல் மேலும் விரிவடையும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

 ஈரான் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக பாரசீக வளைகுடா பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன் துபாய் சர்வதேச விமான நிலையமும் குறிவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் கவலைகள் மேலும்  அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.  இந்நிலையில்  அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்களும் பிராந்தியத்தில் பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.  அத்துடன்  மத்திய கிழக்கில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களையும் குறிவைக்கத் தொடங்குவதாக ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா   நாடுகளில் அச்சம் நிலவுகிறது. குறிப்பாக பல சர்வதேச நிதி நிறுவனங்கள் செயல்படும் துபாய் நகரம் அதிக பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் சரக்கு போக்குவரத்தையும் ஈரான் தடை செய்துள்ளதாக கூறப்படுகிறது. உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையாக உள்ள இந்த இடத்தில் தடைகள் ஏற்பட்டதால் உலகளாவிய எண்ணெய் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நடவடிக்கைகள் உலக பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என உலக நாடுகளிடையே அச்சம் நிலவுகிறது.