நடுக்கடலில் ஈரான் ராணுவம் அதிரடி வேட்டை... சரக்கு கப்பல் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு!

 


அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஓமன் அருகே சென்ற சரக்கு கப்பல் மீது ஈரான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள ஈரான், அந்தப் வழியாகச் செல்லும் கப்பல்கள் கண்டிப்பாகத் தன்னிடம் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த விதியை மீறிச் சென்ற ஒரு சரக்கு கப்பலை ஈரானின் புரட்சிகர காவல் படையின் படகுகள் சுற்றி வளைத்தன. ஓமனுக்கு வடகிழக்கே 28 கிலோமீட்டர் தொலைவில் வைத்து அந்த கப்பலை நோக்கி ஈரானிய வீரர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரான் ராணுவம் விடுத்த எச்சரிக்கைகளைப் புறக்கணித்த காரணத்தால், கடல்சார் சட்டத்தின்படி அந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் சரக்கு கப்பலின் ஒரு பகுதி கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகக் கடல்சார் வர்த்தக நடவடிக்கை அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஆத்திரமடைந்துள்ள ஈரான், தற்போது முக்கிய கடல் வழித்தடங்களை முடக்கி வருவது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருநாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தப் பாகிஸ்தான் எடுத்து வரும் முயற்சிகளும் தற்போது வரை தோல்வியிலேயே முடிந்துள்ளன.

ஈரானின் இந்த அதிரடி நடவடிக்கையால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. தடையை மீறும் கப்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரான் தொடர்ந்து எச்சரித்து வருவதால், அந்தப் பகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ள நிலையில், ஈரானும் தனது ராணுவ பலத்தைக் காட்டி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என வர்த்தக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.