ஈரான் நாணயம் கடும் வீழ்ச்சி: விலைவாசி உயர்வால் மக்கள் கடும் அவதி!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடன் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக ஈரானின் அதிகாரப்பூர்வ நாணயமான ரியால் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் அரசியல் சூழலால் அந்நாட்டின் பொருளாதார நிலைமை கேள்விக்குறியாகி உள்ளதுடன் நாணயத்தின் மதிப்பு அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது. நேற்று நிலவரப்படி ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரானிய ரியாலின் மதிப்பு 18,10,000 ஆக சரிந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ரியால் நாணயத்தின் மதிப்பு 15 சதவீதம் வரை சரிந்துள்ளதால் அந்நாட்டு மக்களிடையே கடும் பீதி ஏற்பட்டுள்ளது. இதன் நேரடி விளைவாக பால் மற்றும் ரொட்டி போன்ற அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையாக உயர்ந்து பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது. அதுபோல ஒரு யூரோவுக்கு எதிரான ரியாலின் மதிப்பு 21,10,000 ஆகவும், ஒரு பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிரான மதிப்பு 24,40,000 ஆகவும் வீழ்ச்சி அடைந்து அந்நாட்டு பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்துள்ளது.
ஈரானில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் பொருளாதார மாற்றங்களால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். உலக நாடுகளுடனான மோதல் போக்கு நீடிப்பதால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் போர் மேகங்கள் சூழ்ந்தால் ஈரானின் நாணய மதிப்பு இன்னும் மோசமான நிலைக்குச் செல்லும் என்று அஞ்சப்படுவதால் சர்வதேச அளவில் இது உற்றுநோக்கப்படுகிறது.