ஈரானின் காசிம் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல்... மீண்டும் போர் வெடிக்குமா?

 

ஈரானின் மிக முக்கியமான கடல்சார் வழித்தடப் பகுதிகள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடியாகத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. குறிப்பாக ஈரானில் உள்ள காசிம் துறைமுகம் மற்றும் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பந்தர் அப்பாஸ் நகர் ஆகியவற்றைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது நிகழ்ந்துள்ள இந்தத் திடீர் ராணுவ நடவடிக்கை மேற்காசியப் பகுதியில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் ஈரானுக்கு எதிராக நடத்திய வான்வழித் தாக்குதலில் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் பலியானதோடு, அந்நாட்டின் முக்கியத் தலைவர்களும் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானியத் துறைமுகங்களை முற்றுகையிடுவோம் என அமெரிக்கா எச்சரித்திருந்தது. இருப்பினும், போர் நிறுத்த நீட்டிப்பு அறிவிப்பால் தணிந்திருந்த போர் மேகங்கள், தற்போது காசிம் துறைமுகத் தாக்குதலால் மீண்டும் சூழ்ந்துள்ளன.

மீண்டும் ஒரு முழு அளவிலான போர் தொடங்குவதற்கான அடையாளம் இது இல்லை என அமெரிக்க மூத்த அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது போர் நிறுத்த உடன்பாடு முடிவுக்கு வந்ததற்கான அறிகுறியும் அல்ல என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், ஈரானின் முக்கியக் கடல் வழித்தடங்களைத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் உலக நாடுகள் மிகுந்த கவலையடைந்துள்ளன.