ட்ரம்ப் மகள் இவான்காவைக் கொல்ல சதித்திட்டம் அம்பலம் - ஈரானிய உளவுத்துறை முகவர் கைது!

 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது கடந்த காலங்களில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை முயற்சிகளின் வடுக்கள் இன்னும் மறையாத நிலையில், அவரது மூத்த மகளும், முன்னாள் வெள்ளை மாளிகை ஆலோசகருமான இவான்கா டிரம்பைக் கொடூரமாகக் கொலை செய்யத் தீட்டப்பட்ட சர்வதேசச் சதித்திட்டம் ஒன்று உளவுத்துறையினரால் அதிரடியாக முறியடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பிரபலப் புலனாய்வு நாளிதழான 'நியூயார்க் போஸ்ட்' வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் செய்தியின்படி, ஈரானின் உத்தியோகபூர்வ ராணுவப் பிரிவான இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த முன்னணி உளவு முகவரான முகமது பக்கர் என்பவர் இந்த அசுர சதித்திட்டத்தின் பின்னணியில் இருந்து செயல்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தால் ஈரானிய ஜெனரல் காசெம் சுலைமானி படுகொலை செய்யப்பட்டதற்குப் பழிவாங்கவே , டிரம்ப் குடும்பத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதலுக்கு ஈரான் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கைதான முகமது பக்கர், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள இவான்கா டிரம்ப் மற்றும் அவரது கணவர் ஜாரெட் குஷ்னரின் அதிநவீன சொகுசு இல்லத்தின் முழுமையான வரைபடங்கள் , அவர்களின் தினசரிப் பாதுகாப்பு விவரங்கள் மற்றும் நடமாட்டக் கால அட்டவணையைச் சர்வதேசப் பயங்கரவாதக் குழுக்களின் ரகசிய இணையப் பக்கங்களில் பகிர்ந்து, தாக்குதலை அரங்கேற்ற முயன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான சிஐஏ கொடுத்த ரகசிய மற்றும் துல்லியமான தகவலின் பேரில், கடந்த மே 15, 2026 அன்று துருக்கி நாட்டுப் பாதுகாப்புப் படையினர் இஸ்தான்புல் நகரில் வைத்து முகமது பக்கரைச் சினிமா பாணியில் அதிரடியாக வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். சர்வதேசப் பாதுகாப்பு விதிகளின்படி, துருக்கியில் கைதான பயங்கரவாதி முகமது பக்கர் அமெரிக்காவிற்குத் துரிதமாக நாடு கடத்தப்பட்டு , நியூயார்க் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதிபர் குடும்பத்தைச் சுற்றியுள்ள இந்த கொடூர சதி வலை முறியடிக்கப்பட்டுள்ளது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.