ஈரானியக் கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.. புலன் விசாரணையால் தமிழக மீனவர் உடல் கொண்டுவர தாமதம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!
சவூதி அரேபியாவில் ஈரானியக் கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மயிலாடுதுறை மீனவரின் உடலைத் தமிழகத்திற்குக் கொண்டுவரத் தூதரக ரீதியாக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகச் சட்டமன்றத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் சவூதி அரேபியாவில் தங்கிக் கடலில் மீன்பிடித்தபோது, ஈரானியக் கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்; 3 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை காசிமேட்டைச் சேர்ந்த 80 தமிழக மீனவர்களை ஆந்திர அதிகாரிகள் கைது செய்து, 8 விசைப்படகுகளைப் பறிமுதல் செய்த விவகாரம் குறித்துச் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து விவாதிக்க வலியுறுத்தினார்.
மயிலாடுதுறையைச் சேர்ந்த மாவீரன், சங்கர், பால்ராஜ், மணிகண்டன் ஆகியோர் சவூதி அரேபியாவிற்கு மீன்பிடிக்கச் சென்றபோது இத்தாக்குதல் நடந்துள்ளது. தற்காப்பிற்காகக் கொள்ளையர்களைத் தடுக்க முயன்றபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாவீரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாகச் சவூதி நாட்டில் முறையான புலன் விசாரணை நடைபெற்று வருவதால், உயிரிழந்த மாவீரனின் உடலை இந்தியாவிற்கு அனுப்புவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் மூலமாகவும், மீன்வளத்துறை அமைச்சகம் மற்றும் இந்தியத் தூதரகம் மூலமாகவும் காயமடைந்த மீனவர்களையும், மாவீரனின் உடலையும் விரைவில் தமிழகத்திற்குக் கொண்டுவரத் தேவையான அனைத்துப் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.