சவுதி, குவைத் மீது ஈரான் ‘ட்ரோன்’ மழை.. உலக நாடுகளை அதிரவைத்த தாக்குதல்!
வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் மேகம் இப்போது பெரும் புயலாக மாறியுள்ளது! சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளை இலக்கு வைத்து இன்று அதிகாலை ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதல் உலகையே அதிர வைத்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் இன்று அதிகாலை சவுதி அரேபியா மற்றும் குவைத் மீது ஏராளமான தற்கொலை படை ட்ரோன்களை ஏவியுள்ளது.
சவுதியின் எண்ணெய் வளம் மிக்க கிழக்கு மாகாணத்தை நோக்கி வந்த 2 ட்ரோன்களை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தினர். குவைத் நாட்டின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளைக் குறிவைத்து வந்த 6 ட்ரோன்களை குவைத் தேசிய பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
குவைத்தில் ஒரு அரசு அலுவலகக் கட்டடத்தில் ட்ரோன் மோதியதில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதில் 11 வயது சிறுமி உட்பட சிலர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக குவைத் தேசிய எண்ணெய் நிறுவனம் தனது கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் நிலவும் சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு இதுவே முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஈரானுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். "ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் போக்குவரத்தை ஈரான் தடுத்தால், அவர்கள் இதுவரை வாங்கிய அடியை விட 20 மடங்கு பலமான அடியை அமெரிக்கா கொடுக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.