குவைத் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் - மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்!

 

குவைத்தில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளத்தைக் குறிவைத்து ஈரான் ஏவுகணை மற்றும் தற்கொலைப்படை ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர் பதற்றம் உச்சமடைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வந்த தற்காலிக அமைதிக்குப் பிறகு, மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே தீவிர மோதல் வெடித்துள்ளது:

ஹர்முஸ் ஜலசந்தி வழியே செல்லும் சரக்கு மற்றும் எண்ணெய்க் கப்பல்களை ஈரான் முடக்கியதைத் தொடர்ந்து, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்தது. இதற்குப் பதிலடியாகக் கெஷ்ம் தீவு மற்றும் பிற பகுதிகளில் உள்ள ஈரானிய கட்டமைப்புகள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தின.

அமெரிக்காவின் சமீபத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, குவைத்தில் உள்ள அஹ்மத் அல்-ஜாபர் விமானத் தளம் மீது ஈரான் ராணுவம் 'ஆபரேஷன் தண்டர்போல்ட்' என்ற பெயரில் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக அறிவித்துள்ளது.

ஈரானால் ஏவப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை குவைத் மற்றும் அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தி முறியடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலில் அமெரிக்கப் போர் விமானங்களுக்கோ அல்லது ராணுவ வீரர்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனச் செய்தித் தொடர்பாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஜோர்டான் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களாலும், அதற்குப் பதிலடியாக அமெரிக்கா மேற்கொண்டு வரும் வான்வழித் தாக்குதல்களாலும் வளைகுடாப் பகுதியில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. கப்பல் போக்குவரத்து மற்றும் சர்வதேச எண்ணெய் விநியோகம் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்பதால் உலக நாடுகள் கவலை அடைந்துள்ளன.