ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிப்பு?! பலன் கொடுத்த பேச்சுவார்த்தை!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வரும் போர், உலகப் பொருளாதாரத்தையே உலுக்கி வரும் நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்காக இரு நாட்டுத் தூதுக்குழுக்களும் இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முகாமிட்டுள்ளன.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் உற்சாக வரவேற்பிற்கு மத்தியில் இந்தப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. அமெரிக்கா சார்பில் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் (JD Vance) தலைமையிலான குழு பங்கேற்றுள்ளது. ஈரான் சார்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகம்மது பாகர் கலிபா தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் வந்துள்ளனர்.
பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பாகவே ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. கத்தார் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 6 பில்லியன் டாலர் மதிப்பிலான ஈரானிய சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளதாக ஈரான் தரப்பில் கூறப்படுகிறது.
இதனை அமெரிக்க வெள்ளை மாளிகை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட இது ஒரு முக்கிய 'சிக்னல்' ஆகப் பார்க்கப்படுகிறது. இதற்குப் பதிலாக, உலக நாடுகளின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்யும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் உடனடியாகத் திறந்து விட வேண்டும் என்று அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் "அமெரிக்காவை ஏமாற்ற ஈரான் முயற்சித்தால், அதன் விளைவுகள் மிகக் கொடூரமாக இருக்கும். இந்தப் பேச்சுவார்த்தையில் ஒரு நிலையான முடிவு எட்டப்பட வேண்டும்" என பதிவிட்டுள்ளார். அமெரிக்கா 15 அம்சத் திட்டத்தையும், ஈரான் 10 அம்சத் திட்டத்தையும் பரஸ்பரம் நிபந்தனைகளாக முன்வைத்துள்ளன.
இதற்கிடையே, ஹார்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் சம்மதித்தாலும், அங்கு ஈரானியப் படைகளால் வைக்கப்பட்ட கடல் கன்னிவெடிகள் அனைத்தையும் அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில கன்னிவெடிகள் இருக்கும் இடத்தை ஈரான் ராணுவமே மறந்து விட்டதாகக் கூறப்படுவது கப்பல் நிறுவனங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்த போதிலும், இந்த இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால், கடந்த சில வாரங்களாக நிலவி வரும் போர் மேகங்கள் கலைந்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.