இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல்; ஈரான் தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்!

 

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஹர்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்று கொண்டிருந்த இந்திய எண்ணெய் கப்பல்கள் மீது ஈரானின் புரட்சிகர காவல்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அதிரடியாகக் களமிறங்கியுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், டெல்லியில் உள்ள ஈரான் தூதரை நேரில் அழைத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈராக் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு இரண்டு இந்தியக் கப்பல்கள் நேற்று ஹர்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்தன. லரக் தீவு அருகே கப்பல்கள் வந்தபோது, ஈரானின் புரட்சிகர காவல்படையினர் இந்தியக் கப்பல்களைக் குறிவைத்துத் திடீரெனத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். நல்வாய்ப்பாக இந்தத் தாக்குதலில் இந்திய மாலுமிகள் யாருக்கும் காயமோ, பாதிப்போ ஏற்படவில்லை. இருப்பினும், பாதுகாப்பு கருதி இந்தியக் கப்பல்கள் அந்தப் பகுதியிலிருந்து உடனடியாகத் திருப்பி விடப்பட்டன.

ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்தை முடக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக ஹர்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்தது. இந்த மோதலுக்கு நடுவே இந்தியக் கப்பல்கள் சிக்கிக்கொண்டதே இந்தத் தாக்குதலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்தியக் கப்பல்கள் மீதான இந்த அத்துமீறிய தாக்குதலை மத்திய அரசு சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது பதாலியை நேரில் அழைத்த வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தத் தாக்குதல் குறித்து முறையான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சர்வதேச கடல் எல்லை விதிகளின்படி வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவது சட்டவிரோதம் என்பதை இந்தியா திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏற்கனவே அமெரிக்கா - ஈரான் மோதலால் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் மத்திய அரசுக்குக் கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.