"ஈரானின் அணு உலைகள், பாலங்கள் தகர்க்கப்படும்.." - ட்ரம்ப் எச்சரிக்கையால் பதறும் உலக நாடுகள்!

 

ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் அண்மையில் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தச் சூழலில், ஈரானின் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்துவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்திற்கு வருகை தந்த அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம், ஈரானில் உள்ள பாலங்களைக் குண்டுகளை வீசித் தகர்க்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்துப் பேசிய டிரம்ப், ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கையை முன்வைத்தார். "ஈரான் உடனடியாக எங்களுடன் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும். எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சுமுகமான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள அவர்கள் முன்வர வேண்டும். அப்படிச் செய்ய அவர்கள் தவறினால், அடுத்த வாரம் ஈரானின் எல்லைப் பகுதிகளை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் தாக்குதல்களின் ஒரு பகுதியாக, அவர்களின் அணு உலைகள் மற்றும் முக்கியப் பாலங்கள் மீது குண்டுகள் வீசித் தகர்க்கப்படும்."

மேலும் தொடர்ந்த டிரம்ப், "அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் ஒப்பந்தத்திற்கு வர மறுத்தால், அந்நாட்டில் ஒருவருமே மீதம் இருக்க மாட்டார்கள்" என மிகவும் காட்டமாக எச்சரித்தார். அதுமட்டுமின்றி, "நாளை இரவே ஈரானை நோக்கி எங்களது படைகள் மிகக் கடுமையான தாக்குதலைத் தொடுக்கப் போகின்றன" என்றும் அவர் அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே ஏற்கனவே வான்வழித் தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில், தற்பொழுது 30-க்கும் மேற்பட்டோர் பலியாகியும், 260-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளதாக ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தகைய போர்ச் சூழலால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் கடுமையான ஏற்ற இறக்கங்களும், பெரும் பொருளாதாரத் தாக்கமும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன.