ஈரான் அதிகாரப்பூர்வத் தகவல்... அயதுல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கில் 4.3 கோடி பேர் பங்கேற்பு  - வரலாற்றின் மிகப்பெரிய இறுதி ஊர்வலம்!

 

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளின் வான்வழித் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் 6 நாள் மாரத்தான் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில், ஒட்டுமொத்தமாக 4.3 கோடிக்கும்அதிகமான மக்கள் நேரில் பங்கேற்று அஞ்சலி செலுத்தியுள்ளதாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய இறுதி ஊர்வலங்களில் ஒன்றாக இது பதிவாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தலைநகர் தெஹ்ரானில் உள்ள அவரது குடியிருப்பு வளாகத்தைக் குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய அதிரடித் தாக்குதலில் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதால் இருதரப்புக்கும் இடையே போர் மூண்டது.

சுமார் 40 நாட்களுக்கும் மேலாக நீடித்த கொடூரப் போருக்குப் பின், இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட தற்காலிக அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் மோதல்கள் நிறுத்தப்பட்டு, கடந்த சூலை 4-ஆம் தேதி அலி காமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் தொடங்கின. உச்ச தலைவர் அலி காமேனியின் சவப்பெட்டி பொதுமக்களின் அஞ்சலிக்காக ஈரானின் பல்வேறு பிரதான நகரங்களுக்கும், அண்டை நாடான ஈராக்கிற்கும் கொண்டு செல்லப்பட்டது.

அலி காமேனி மற்றும் அவருடன் உயிரிழந்த அவரது 14 மாதப் பேத்தி ஜஹ்ரா உட்படக் குடும்பத்தினரின் உடல்கள் ஈரானின் தெஹ்ரான், கோம், மஷ்ஹத் மற்றும் ஈராக்கின் புனித நகரங்களான நஜாஃப், கர்பலா ஆகிய 5 முக்கிய நகரங்களில் பொதுமக்கள் மற்றும் சர்வதேசப் பிரதிநிதிகளின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன.

மொபைல் போன் தரவுகள், பொதுப் போக்குவரத்துப் பதிவுகள் மற்றும் கூட்ட நெரிசல் அடர்த்திப் பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையில், இந்த 6 நாள் நிகழ்வுகளில் ஒட்டுமொத்தமாக 4.1 கோடி முதல் 4.3 கோடி மக்கள் நேரடியாகப் பங்கேற்று அஞ்சலி செலுத்தியதாக ஈரான் அரசு ஊடகமான 'பிரஸ் டிவி' உறுதிப்படுத்தியுள்ளது. 6 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த பிரம்மாண்ட வரலாற்று இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நேற்று அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தன.

அதனைத் தொடர்ந்து, தலைநகர் தெஹ்ரானில் உள்ள புகழ்பெற்ற கிராண்ட் முசாலா மத வழிபாட்டுத் தல வளாகத்திற்குள் அயதுல்லா அலி காமேனியின் உடல் அனைத்து அரசு மற்றும் மத மரியாதைகளுடன் நேற்று முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.

கோடைக்காலக் கடுமையான வெப்ப அலை மற்றும் லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் ஏற்பட்ட அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், அசம்பாவிதங்கள் ஏதும் நேராமல் தடுக்க தெஹ்ரான் மற்றும் மஷ்ஹத் நகரங்கள் முழுவதும் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் மற்றும் பிராந்திய போலீசார் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கூட்ட நெரிசல்களைச் சீரமைக்கவும், அவசரக் கால மருத்துவ ஊர்திகள் தடையின்றிச் செல்லவும் முக்கியப் பாதைகளைப் போலீசார் முழுமையாகத் தங்களது கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.