டிரம்ப், நெதன்யாகுவை நரகத்திற்கு அனுப்பினால் ₹450 கோடி பரிசு - ஈரான் நாடாளுமன்றத்தில் மசோதா!

 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரை படுகொலை செய்பவர்களுக்கு 50 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் 450 கோடி ரூபாய்) பரிசுத்தொகை வழங்குவதற்கான புதிய சட்ட மசோதாவை ஈரான் நாடாளுமன்றம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

மேற்காசிய பகுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுடன் 40 நாட்கள் நீடித்த போர் அண்மையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், ஈரானின் இந்த அதிரடி நகர்வு உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரானின் ஆன்மீகத் தலைவர் அலி கமேனி வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் அட்மிரல் பிராட் கூப்பர் ஆகியோரே முழு முதற்காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

இதற்குப் பழிவாங்கும் விதமாகவே, ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் தலைவர் இப்ராஹிம் அசிசி தலைமையில் புதிய மசோதா ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. "இஸ்லாமிய குடியரசின் இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளின் பரஸ்பர நடவடிக்கை" என்ற பெயரில் இந்தச் சட்ட வரைவு கொண்டு வரப்பட்டுள்ளது.

டிரம்ப் மற்றும் நெதன்யாகுவை 'நரகத்திற்கு அனுப்பும்' எந்தவொரு தனிநபருக்கோ அல்லது குழுவிற்கோ ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக 50 மில்லியன் யூரோக்களைப் பரிசாக வழங்கும் என இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானில் அரசு ஆதரவு குழுக்கள் நடத்திய 'இரத்த உடன்படிக்கை' போன்ற பிரச்சாரங்கள் மூலம் ஏற்கனவே பல மில்லியன் டாலர்கள் இதற்காகத் திரட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 'ஹண்டாலா' என்ற ஹேக்கர் குழுவும் தங்களின் பங்கிற்குப் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.

ஈரான் நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவர் மஹ்மூத் நபாவியன் இதுகுறித்து எச்சரிக்கையில், "ஈரான் மீதோ அல்லது எங்கள் தலைவர்கள் மீதோ மீண்டும் ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மட்டுமின்றி அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் அரபு நாடுகளின் அரசுகளும் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்று தெரிவித்துள்ளார்.

ஈரானின் இந்தத் தொடர் அச்சுறுத்தல்களுக்கு ஏற்கனவே பதிலடி கொடுத்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "அமெரிக்கத் தலைவர்களுக்கு எதிராக ஈரான் ஏதேனும் சதி வேலையில் ஈடுபட்டால், ஈரான் என்ற நாடே பூமியில் இல்லாதவாறு முற்றிலும் அழிக்கப்படும்" என மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இரு நாடுகளுக்கும் இடையே மறைமுக அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தாலும், ஈரானின் இந்த அதிகாரப்பூர்வ சட்ட மசோதா மேற்காசியாவில் மீண்டும் போர் பதற்றத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.