உலகக்கோப்பையில் ஈரான் பங்கேற்பது உறுதி... பிபா தலைவர் அறிவிப்பு!
அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் 2026 பிபா (FIFA) உலகக்கோப்பையில் ஈரான் கால்பந்து அணி நிச்சயம் பங்கேற்கும் என்று சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்பான்டினோ அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். கனடாவின் வான்கூவர் நகரில் நடைபெற்ற 76-வது பிபா காங்கிரஸ் கூட்டத்தில் அவர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
சமீபகாலமாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர்ச் சூழல் மற்றும் அரசியல் பதற்றங்கள் காரணமாக, ஈரான் அணி அமெரிக்காவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்குமா என்ற சந்தேகம் உலக அளவில் நிலவி வந்தது. இதற்கிடையில், கனடா அரசு ஈரானிய கால்பந்து சம்மேளன அதிகாரிகளுக்கு விசா மறுத்ததால் ஈரானிய பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. இத்தகைய இக்கட்டான சூழலில் இன்பான்டினோவின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
"2026 உலகக்கோப்பையில் ஈரான் நிச்சயமாகப் பங்கேற்கும். அவர்கள் அமெரிக்க மண்ணில் கால்பந்து விளையாடுவார்கள் என்பதை நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன். கால்பந்து உலகை ஒன்றிணைக்கும் சக்தி கொண்டது. மக்களை ஒன்றாகக் கொண்டுவருவது எனது மற்றும் நமது கூட்டுப் பொறுப்பு. இந்த உலகம் ஏற்கனவே பல பிரிவினைகளைச் சந்தித்து வருகிறது, நாம் ஒற்றுமைக்காக முயலாவிட்டால் எதிர்காலம் என்னவாகும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அரசியல் சூழல்கள் எப்படி இருந்தாலும், தகுதி பெற்ற அனைத்து அணிகளும் விளையாடுவதை பிபா உறுதி செய்யும் என்பதை அவர் தனது பேச்சின் மூலம் தெளிவுபடுத்தினார்.
ஈரான் அணியின் போட்டி அட்டவணை (குழு G): உலகக்கோப்பையில் 'குழு ஜி' பிரிவில் இடம்பெற்றுள்ள ஈரானின் லீக் போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவிலேயே நடைபெற உள்ளன. ஜூன் 15: நியூசிலாந்துக்கு எதிரான போட்டி (லாஸ் ஏஞ்சல்ஸ்), ஜூன் 21: பெல்ஜியத்திற்கு எதிரான போட்டி (லாஸ் ஏஞ்சல்ஸ்), ஜூன் 26: எகிப்திற்கு எதிரான போட்டி (சியாட்டல்). பிபா தலைவரின் இந்தத் தீர்க்கமான அறிவிப்புக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
"ஜியானி சொன்னால் எனக்குச் சம்மதமே, அவர்கள் விளையாடட்டும்" என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு ஈரான் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும், உலக கால்பந்து அரங்கில் ஒரு புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.