விஜய்க்கு நேரடிப் போட்டியாகக் களம் இறங்குகிறாரா அண்ணாமலை? புதிய வாக்கு வங்கி வியூகம்!

 

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் புதிய திருப்பமாக தவெக வெற்றி பெற்று, நடிகர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், பாஜகவில் இருந்து சமீபத்தில் விலகிப் புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ள அண்ணாமலை, தவெக-வின் வாக்கு வங்கிக்கு மாற்றாகத் தனது புதிய அரசியல் கணக்குகளைத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய தேர்தல் முடிவுகளின் புள்ளிவிவரங்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, தவெக-வின் வெற்றிப் பயணத்தில் தலித் மற்றும் சிறுபான்மையின மக்களின் வாக்குகளைப் பெருமளவில் தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது. இதுவே திராவிடக் கட்சிகளின் பாரம்பரியக் கோட்டைகளை உடைத்து தவெக  ஆட்சிக்கட்டிலில் அமர மிக முக்கியக் காரணமாக அமைந்தது.

59 ஆண்டுகாலத் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை வீழ்த்தி தவெக உருவாக்கியுள்ள இந்த புதிய வாக்கு வங்கி, தமிழக அரசியல் களத்தை முற்றிலும் ஒரு புதிய திசையை நோக்கித் திருப்பியுள்ளது.

பாஜக-விலிருந்து விலகிய பின், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுப் புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ள அண்ணாமலை, தவெக-விற்குப் போட்டியாகப் புதிய சமூக ஒருங்கிணைப்பைக் கையில் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தவெக-வின் தலித் மற்றும் சிறுபான்மையினர் வாக்கு வங்கிக்கு மாற்றாக, அண்ணாமலையின் புதிய இயக்கம் தலித் அல்லாத பிற சமூக வாக்குகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் நகரவுள்ளதாகத் தெரிகிறது.

தமிழகத்தின் முப்பெரும்பான்மை சமூகப் பிரிவுகளான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொதுப்பிரிவு ஆகிய சமூகங்களின் வாக்குகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதே அண்ணாமலையின் முதன்மை அரசியல் இலக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலத்தில் திமுக, அதிமுக என இரு திராவிடக் கட்சிகளும் தேர்தல் தோல்வியால் உள்கட்சிச் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தி வரும் வேளையில், அண்ணாமலை தனது அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராகி வருகிறார். தமிழகத்தில் இனி திராவிடக் கட்சிகளுக்குப் பதில் தவெக-வே முதன்மை சக்தியாக உருவெடுக்கும் என்பதை உணர்ந்துள்ள அண்ணாமலை, முதலமைச்சர் விஜய்க்கு நேரடி மற்றும் சம பலமுள்ள மாற்று அரசியல் போட்டியாளராக உருவெடுக்கத் திட்டமிட்டுள்ளார்.

ஊழலற்ற சுத்தமான அரசியல், சாதி வழித் துவேஷமற்ற உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் அப்துல் கலாமின் கனவுத் திட்டங்களை முன்வைத்து, தவெக-வின் இளம் வாக்காளர்களைத் தன் பக்கம் இழுக்க அண்ணாமலை வியூகம் வகுத்து வருகிறார்.

மாநிலத்தில் தவெக அரசு தனது முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை நாளை எதிர்கொள்ளவுள்ள நிலையில், அண்ணாமலையின் இந்த புதிய சமூக வாக்கு வங்கி உத்திகள் தமிழக அரசியல் களத்தில் அடுத்தகட்ட விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளன.