"அண்ணாமலை புதிய கட்சி தொடங்குகிறாரா?" - நயினார் நாகேந்திரன் சொன்ன பதில்!

 

இன்று தனது 42-வது பிறந்தநாளைக் கொண்டாடும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு, நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் "முன்னாள் மாநிலத் தலைவர்" எனக் குறிப்பிட்டு வாழ்த்துத் தெரிவித்திருந்தார். இது அவர் பாஜாகவிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்கப்போகிறார் என்ற ஊகங்களை வலுப்படுத்திய நிலையில், இது குறித்துத் தற்போது நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், அண்ணாமலை பாஜாகவிலிருந்து விலகி புதிய பிராந்தியக் கட்சி தொடங்கப் போவதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் உண்மையற்றவை என மறுத்துள்ளார். "அண்ணாமலை அவர்கள் தனது 42-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவர் தனது கட்சியின் மாநிலத் தலைவர் பதவியை முறைப்படி ராஜினாமா செய்து விட்டதால் தான், எனது வாழ்த்துப் பதிவில் 'முன்னாள் மாநிலத் தலைவர்' எனக் குறிப்பிட்டிருந்தேன்.

மற்றபடி, அவர் பாஜாகவிலிருந்து விலகி தனியாகப் புதிய கட்சி தொடங்கப் போகிறார் என்பது குறித்து இதுவரை அவர் டெல்லி தலைமையிடமோ அல்லது இங்குள்ள நம்மிடமோ எவ்விதக் கருத்தையும் பேசவில்லை; அது போன்ற எண்ணமும் அவருக்கு இல்லை" என்று நயினார் நாகேந்திரன் தெளிவுபடுத்தியுள்ளார்.

அண்ணாமலை குறித்த விபரங்களை விளக்கியதைத் தொடர்ந்து, தற்போதைய ஆளுங்கட்சியான தவெக மற்றும் முதலமைச்சர் விஜய் மீது நயினார் நாகேந்திரன் கடுமையான சட்டம்-ஒழுங்கு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.