தேர்தல் ரேஸில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? பா.ஜ.க தலைமைக்குக் கடிதம் - அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்!

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பா.ஜ.க.வின் முக்கிய முகமான அண்ணாமலை இந்த முறை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அவர் கட்சித் தலைமைக்குக் கடிதம் எழுதியிருப்பது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2021 தேர்தலைப் போலவே இந்த முறையும் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. கோவை மண்டலத்தில் அதிக செல்வாக்கு பெற்றுள்ளதாகக் கருதும் பா.ஜ.க, இந்த முறை கோவையில் இரண்டு தொகுதிகளை எதிர்பார்த்தது. குறிப்பாக, அண்ணாமலை கோவையில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட விரும்புவதாகக் கூறப்பட்டது. ஆனால், நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு கோவை மாவட்டத்தில் பா.ஜ.க-விற்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை தான் போட்டியிட விரும்பிய குறிப்பிட்ட தொகுதிகள் பா.ஜ.க-விற்கு ஒதுக்கப்படாததே இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது: அண்ணாமலை கோவை மாவட்டத்தின் கவுண்டம்பாளையம் அல்லது சிங்காநல்லூர் தொகுதிகளில் ஒன்றைக் குறிவைத்திருந்தார். அல்லது தனது சொந்த ஊரான அரவக்குறிச்சி தொகுதியையாவது பா.ஜ.க-விற்குப் பெற அவர் முயன்றார்.

ஆனால், இந்த மூன்று தொகுதிகளுமே பா.ஜ.க-விற்கு ஒதுக்கப்படவில்லை. தற்போது பா.ஜ.க-விற்கு ஒதுக்கப்பட்ட ஒரே தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிடும் சூழல் உள்ளதால், அண்ணாமலை போட்டியிடத் தொகுதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அண்ணாமலை எடுத்த முடிவால் அவரது ஆதரவாளர்கள் மற்றும் இளம் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மாநிலம் முழுவதும் அண்ணாமலைக்காகப் பிரச்சாரம் செய்யத் தயாராக இருந்தவர்களுக்கு இந்தச் செய்தி ஏமாற்றத்தைத் தந்துள்ளதாகத் தெரிகிறது. எனினும், அவர் மாநிலம் முழுவதும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.