சேப்பாக்கம் இனி CSK கோட்டை இல்லையா? சொந்த மண்ணில் 6-வது தொடர் தோல்வி - அதிர்ச்சியில் சென்னை ரசிகர்கள்!

 

19-வது ஐபிஎல் தொடரின் 7-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராகப் போராடித் தோற்றது சென்னை சூப்பர் கிங்ஸ். 209 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்த போதிலும், சென்னை பந்துவீச்சாளர்களால் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது. இந்தத் தோல்வி வெறும் ஒரு போட்டித் தோல்வி மட்டுமல்ல, சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி படைத்துள்ள ஒரு மோசமான சாதனையின் தொடர்ச்சியாகும்.

கடந்த 2025-ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போதே சேப்பாக்கத்தில் சென்னை அணியின் ஆதிக்கம் குறையத் தொடங்கியது. கடந்த ஆண்டில் இந்த மைதானத்தில் விளையாடிய 6 போட்டிகளில், முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்ற சென்னை, அதன்பிறகு விளையாடிய கடைசி 5 போட்டிகளிலும் வரிசையாகத் தோல்வியைத் தழுவியது. தற்போது 2026-ம் ஆண்டுத் தொடரின் முதல் சேப்பாக்கம் போட்டியிலும் பஞ்சாப்பிடம் தோற்றதன் மூலம், தொடர்ந்து 6-வது முறையாகத் தனது சொந்த மண்ணில் மண்டியிட்டுள்ளது சிஎஸ்கே.

சென்னை அணி கடந்த சில ஆண்டுகளில் சேப்பாக்கத்தில் பெற்றுள்ள முடிவுகளைக் கவனித்தால் அதன் சரிவு தெளிவாகத் தெரிகிறது. 2023ம் ஆண்டில் விளையாடிய 8 ஆட்டங்களில் 5 வெற்றிகளைப் பெற்று 3 ஆட்டங்களில் மட்டுமே தோல்வியடைந்தது. 2024ம் ஆண்டில் 7 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றிகளுடன் 2 ஆட்டங்களில் மட்டுமே தோல்வியைக் கண்டது. 2025ம் ஆண்டில் தான் சென்னை அணிக்குத் திருப்புமுனையாக அமைந்தது. விளையாடிய 6 ஆட்டங்களில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்று, 5 ஆட்டங்களில் மோசமாகத் தோல்வியடைந்தது. 2026 ம் ஆண்டில்  இதுவரை விளையாடிய ஒரு ஆட்டத்திலும் தோல்வியையே சந்தித்துள்ளது.

"எதிரணிகளுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய சேப்பாக்கம் மைதானம், இப்போது அவர்களே வந்து கொண்டாடும் இடமாக மாறிவிட்டது" எனச் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். ஆடுகளத்தின் தன்மை மாறியுள்ளதா அல்லது சென்னை அணியின் பந்துவீச்சு வியூகத்தில் குறைபாடுகள் உள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

சொந்த மண்ணில் தொடர்ந்து சறுக்கி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ், அடுத்தடுத்த போட்டிகளில் தனது 'கோட்டை'யை எப்படிக் மீட்கப்போகிறது என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.