உள்துறையைத் தனி அமைச்சரிடம் ஒப்படைக்கிறாரா முதலமைச்சர் விஜய்?- யாருக்கு வாய்ப்பு?!
தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ள சூழலில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரத்தைக் கையாள்வது தொடர்பாகக் கோட்டை வட்டாரத்தில் மிக முக்கியப் புதிய விவாதங்கள் எழத் தொடங்கியுள்ளன. முதலமைச்சர் விஜய் தன் வசம் வைத்துள்ள காவல் மற்றும் உள்துறையை, நிர்வாகச் சுமையைக் குறைக்கும் பொருட்டுத் தனி ஒரு அமைச்சரிடம் ஒப்படைக்கலாமா என்ற ஆலோசனையில் அவர் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
மாநிலத்தில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் சில குற்றச் சம்பவங்கள் சட்டம் ஒழுங்கு குறித்த விவாதங்களை எழுப்பியுள்ள நிலையில், முழு நேரக் கவனம் செலுத்தும் வகையில் உள்துறைக்கு என்று தனி அமைச்சரை நியமிப்பதே சரியாக இருக்கும் எனத் தலைமை ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
உள்துறையை முதலமைச்சர் விஜய் விட்டுக்கொடுக்க முடிவெடுத்தால், அந்தப் பொறுப்பு தவெக அமைச்சரவையில் உள்ள இரு முக்கியப் புள்ளிகளில் ஒருவருக்குக் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் உள்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தவெகவின் தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளருமான ஆதவ் அர்ஜுனா பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார். கட்சியின் மிக முக்கியத் திட்டமிடுபவராகப் பார்க்கப்படும் இவருக்குக் கூடுதல் பொறுப்பாகவோ அல்லது மாற்றாகவோ உள்துறை வழங்கப்படலாம் என ஒரு தரப்பு கூறுகிறது.
காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தவெகவின் சிவகங்கை கிழக்கு மாவட்டச் செயலாளருமான டாக்டர் டி.கே.பிரபு இயற்கை வளங்கள் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார். ஆரம்பத்திலிருந்தே கட்சியின் தீவிரச் செயல்பாட்டாளராக இருக்கும் இவருக்கு இந்த முக்கியப் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக மற்றொரு பேச்சு நிலவுகிறது.
முதலமைச்சரே உள்துறையைக் கவனிக்கும் போது பிற துறைகளின் மீதான கவனம் மற்றும் மாவட்ட வாரியான நிர்வாக ஆய்வுகளில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளதால், இந்தத் துறை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.