ஈரான் ரசாயன ஆயுதம் தயாரிக்கிறதா? இஸ்ரேல் பகீர் குற்றச்சாட்டால் போர் பதற்றம்
ஈரான் தற்போது ரசாயன ஆயுதங்களைத் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். டெல் அவிவ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தும் திறனை ஈரான் பெறுவதை இஸ்ரேல் ஒருபோதும் அனுமதிக்காது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், தாக்குதல் நடக்கும் வரை காத்திருக்க வேண்டுமா அல்லது முன்கூட்டியே ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்பதைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஈரான் வெளியுறவுத் துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுபோன்ற தகவல்கள் தவறானவை என்றும், நீண்டகாலப் போரைத் தொடங்குவதற்காக அமெரிக்கா பொய்யான குற்றச்சாட்டுகளை உருவாக்குவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
மேலும், ஈரான் மீது மீண்டும் ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து இஸ்ரேலுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதால், இரு நாடுகள் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.