பள்ளிகளுக்கு விடுமுறையா? நாளை தமிழகத்தின் 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து, பரவலாகக் கனமழை பெய்து வரும் நிலையில், நாளை தமிழகத்தில் உள்ள 26 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நாளை தமிழகத்தின் நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 26 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே சென்னை, புறநகர் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதோடு, கோடை வெப்பமும் தணிந்துள்ளது. நாளையும் 26 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்பதால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளது.

எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறும், இடி மின்னல் ஏற்படும் போது மரங்களின் அடியிலோ அல்லது மின் கம்பங்களுக்கு அருகிலோ நிற்க வேண்டாம் என்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை மற்றும் கடல் அலைகளின் சீற்றம் குறித்து வானிலை மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.