தவெக - பாஜக கூட்டணியா? 'யெஸ்' சொல்லும் வதந்திகள் - கெத்து காட்டும் தவெக; களநிலவரம் என்ன?
தமிழக வெற்றி கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இடையிலான கூட்டணி குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் அனல் பறந்து வருகின்றன.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணையப்போவதாகத் தொடர்ந்து செய்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மூலமாக இதற்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், இந்த வதந்திகளுக்குத் தவெக தலைமை தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
நேற்று ஈரோட்டில் நடைபெற்ற போராட்டத்தின் போது பேசிய தவெக-வின் முக்கிய நிர்வாகி கே.ஏ. செங்கோட்டையன், கூட்டணி குறித்துப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை எனத் தெரிவித்தார். தமிழக வெற்றி கழகம் வரும் தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என்பதில் விஜய் உறுதியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
"பாஜக எங்களது கொள்கை எதிரி, திமுக எங்களது அரசியல் எதிரி" என ஏற்கனவே விஜய் அறிவித்திருப்பதைக் கட்சி நிர்வாகிகள் சுட்டிக்காட்டுகின்றனர். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக-வுடன் கூட்டணி குறித்துத் தங்கள் கட்சி எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-வுடன் தான் பாஜக கூட்டணி அமைக்கும் என்றும், அதில் மாற்றம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, விஜய்யை பாஜக கூட்டணிக்கு அழைத்ததாகக் கூறி கட்சியின் செய்தித்தொடர்பாளர் பிரசாத் என்பவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆந்திராவில் பவன் கல்யாண் பாஜக-வுடன் இணைந்து வெற்றி பெற்றதைப் போல, விஜய்யும் செய்ய வேண்டும் எனச் சில அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், பவன் கல்யாண் - விஜய் நட்பு என்பது தனிப்பட்ட ரீதியிலானது என்றும், அது அரசியல் கூட்டணியாக மாற வாய்ப்பில்லை என்றும் தவெக தேர்தல் பரப்புரைச் செயலாளர் ஆத்வ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
கூட்டணி வதந்திகளுக்குச் செவி சாய்க்காமல், விஜய் தற்போது வேட்பாளர் நேர்காணலில் தீவிரமாக இறங்கியுள்ளார். முதற்கட்டமாக 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அவர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். மார்ச் 15-ம் தேதி தேர்தல் ஆணையம் தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதால், அதற்கு முன்பே தனது பலத்தைக் காட்டத் தவெக திட்டமிட்டுள்ளது. அதே சமயம், ராமதாஸ், சசிகலா ஆகியோர் எந்த கட்சியுடனும் சேராமல் தனித்து விடப்பட்டதால், விஜய்யை முதல்வர் வேட்பாளராக அறிவித்து மூன்றாவது அணி அமைய வாய்ப்பு அதிகம் என்று அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்த்து ஆரூடம் கூறி வருகின்றனர்.