"நடிச்சா மட்டும் போதுமா? நாட்டை கொடுத்துடுவீங்களா?" - சீமான் ஆவேசம்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாகத் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் சீமான், திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருபவர்களையும், அவர்களைக் கொண்டாடும் ரசிகர்களையும் நோக்கிப் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கிய சீமான், "அறிவைத் தேடி ஓடுங்கள்; அப்போதுதான் நாளைய வரலாறு உங்கள் நிழலைத் தேடி ஓடி வரும். எதற்கும் பயன்படாத, காற்றடிக்கிற திசையெல்லாம் பறந்து போகும் பதராக இருக்காதீர்கள். புயலே அடித்தாலும் அசையாமல் ஒரே இடத்தில் கிடக்கிற வீரியமிக்க நெல்மணிகளாக இருக்கப் பழகுங்கள்," எனத் தனது பாணியில் உரையாற்றினார்.
தற்போது தமிழக அரசியலில் முன்னணி நடிகர்கள் கட்சித் தொடங்கிப் போட்டியிடுவதைச் சுட்டிக்காட்டிய அவர், பின்வரும் காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார்: "திரையில் நன்றாக நடித்தால் மட்டும் போதுமா? உடனே நாட்டை அவர்களிடம் கொடுத்துவிடுவீர்களா? ஒருமுறை நடித்து விட்டால் எல்லாமே கிடைத்துவிடுமா?" எனக் கேள்வி எழுப்பினார்.
"நாட்டு விடுதலைக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் போராடி, எளிமையாக வாழ்ந்து வரும் ஐயா நல்லகண்ணு போன்றவர்கள் யார் என்று இந்தச் சமூகத்திற்குத் தெரியவில்லை. ஆனால், ஒரு நடிகர் என்றால் மட்டும் எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக்கொண்டு ஓடுகிறீர்களே?" என வருத்தம் தெரிவித்தார்.
விஜய் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் தேர்தல் களத்தில் நேரடியாகக் குதித்துள்ள நிலையில், சீமானின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களைக் கவர அனைத்துக் கட்சிகளும் முயன்று வரும் சூழலில், 'திரைப்பயணமா? அல்லது அரசியல் தியாகமா?' என்ற கேள்வியைச் சீமான் தனது பரப்புரையின் மையமாக மாற்றியுள்ளார்.