தவெக-விற்கு ஆதரவா? மாலைக்குள் அறிவிப்பு... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய ஆலோசனை!
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் நிலவும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அதிகாரப்பூர்வ முடிவை இன்று மாலை அறிவிக்க உள்ளது.
சென்னை தி.நகரில் உள்ள அக்கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தில் இன்று மதியம் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தக் கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தவெக-விற்கு ஆதரவு அளிப்பது குறித்த சாதக பாதகங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி கூறுகையில், "தேர்தல் முடிவுகளின்படி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக), ஆட்சி அமைக்க அழைக்காமல் தமிழக ஆளுநர் காலதாமதம் செய்வது ஜனநாயக முறைப்படி தவறானது."
"தவெக-விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்குமா இல்லையா என்பது குறித்த இறுதி முடிவை அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து இன்று மாலைக்குள் அறிவிப்போம்."
ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தவெக-விற்கு ஆதரவு தெரிவித்து திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், இடதுசாரி கட்சிகளும் இதே முடிவை எடுத்தால் அது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, திமுக தலைமையிலான கூட்டணியில் இடதுசாரிகளின் பங்கு முக்கியமானது என்பதால், அவர்களின் முடிவு தவெக தலைவர் விஜய்யின் முதல்வர் கனவை நனவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும்.