கீழடியை விடத் தொன்மையானதா? ஆண்டிப்பட்டியில் 4,000 வருட பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு!

 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழந்தமிழர்களின் பாறை ஓவியங்களும் குகை வாழ்விடமும் கண்டறியப்பட்டுள்ளது. இது அப்பகுதியில் பெரும் வரலாற்று ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு - குமணன்தொழு சாலையில் உள்ள சங்கிலிக்கரடு மலையடிவாரத்தில் அமைந்துள்ள பிரம்மாண்டமான பாறையில் இந்த ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடமலைக்குண்டு அரசுப் பள்ளி ஆசிரியர் செல்வம் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வின் மூலம் இவை வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

இப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ள வெண்மை நிறப் பாறை ஓவியங்களில் மனிதர்கள் கால்களை விரித்த நிலையில் இருப்பது போன்றும், பழந்தமிழர்களின் வேட்டை முறைகள் மற்றும் சடங்கு முறை காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

பாறை ஓவியங்கள் மட்டுமின்றி, இப்பகுதியில் பெருங்கற்காலம் முதல் வரலாற்று காலம் வரை தமிழர்கள் பயன்படுத்திய இரும்பு உருக்கு பொருட்கள், இரும்பை உருக்கப் பயன்பட்ட சுடுமண் குழாய்கள் மற்றும் தேய்ப்பு கருவிகள் போன்ற தொல்பொருட்களும் கிடைத்துள்ளன.

கண்டறியப்பட்டுள்ள சான்றுகள் மற்றும் பாறை ஓவியங்கள் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக இப்பகுதியில் முறையான தொல்லியல் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டால், கீழடியை விடப் பழமையான பழந்தமிழர்களின் நாகரிகச் வரலாறுகள் வெளிப்படும் என்று தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.