undefined

திமுக துணை பொதுச்செயலாளர் ஆகிறாரா ஓ.பி.எஸ்?! - சபாநாயகர் பதவி தருவதாக பேச்சுவார்த்தை!

 

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று திமுகவில் இணைந்துள்ள நிலையில், அவருக்கு வழங்கப்படவுள்ள பொறுப்புகள் குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.

அதிமுகவின் முக்கிய முகமாகவும், மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்த ஒருவருக்கு திமுகவில் தகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவலில், திமுகவின் தற்போதைய உட்கட்சி அமைப்பில் துணைப் பொதுச் செயலாளர் பதவி மிகவும் செல்வாக்கான ஒன்றாகும். ஓ.பி.எஸ் போன்ற ஒரு மூத்த தலைவரை கௌரவிக்கும் வகையில், அவருக்கு இந்த உயர் பதவியுடன் கூடிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தென் மாவட்டங்களில் கட்சியின் செல்வாக்கை உயர்த்த இது உதவும் என திமுக தலைமை கருதுவதாகக் கூறப்படுகிறது.

அதே சமயம் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஓ.பி.எஸ் தனது கோட்டையான போடிநாயக்கனூர் தொகுதியிலேயே திமுக வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

தேர்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் பட்சத்தில், அனுபவம் வாய்ந்த ஓ.பி.எஸ்-க்கு தமிழக சட்டமன்ற சபாநாயகர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவலும் அறிவாலய வட்டாரங்களில் வலுவாகப் பேசப்படுகிறது. இதன் மூலம் அதிமுக தரப்பிற்கு ஒரு மிகப்பெரிய அரசியல் பதிலடியைத் தர திமுக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இன்று கட்சியில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், "நான் ஒரு சாதாரணத் தொண்டனாகவே இணைந்துள்ளேன். கட்சித் தலைமை வழங்கும் எந்தப் பொறுப்பையும் ஏற்றுச் செயல்படுவேன்" என்று மிகவும் அடக்கமாகத் தெரிவித்துள்ளார்.