கொலை நகரமாகிறதா தமிழகம்? - ஒரே நாளில் 12 பேர் கொலை.. சட்டம் - ஒழுங்கு நிலை குறித்துக் கேள்விக்குறி!?

 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெவ்வேறான காரணங்களால் ஒரே நாளில் மட்டும் சுமார் 12 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மாநிலத்தின் தெற்குப் பகுதி முதல் வட மாவட்டங்கள் வரை ஒரே நாளில் அரங்கேறியுள்ள இந்தத் தொடர் கொலைச் சம்பவங்கள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. 

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே சிங்கம் மற்றும் லிங்கசாமி ஆகிய இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் நாகர்கோவில் பகுதியில் தங்கப்பாண்டி என்பவரும் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கும் வகையில், 9 வயதுச் சிறுவன் ஒருவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

தலைநகர் சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரும், மறைமலைநகர் தொழிற்பேட்டைப் பகுதியில் வடமாநில நபர் ஒருவரும் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் காரைக்குடி பகுதியில் மணிகண்டன் என்பவரும், சோழவந்தான் பகுதியில் சித்திக் என்பவரும் அடுத்தடுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலையில் துனிக்கானம் என்பவரும், உளுந்தூர்பேட்டை அருகே ராமசாமி என்பவரும் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பழனியில் குடும்பத் தகராறில் தங்கையின் கணவரே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதேபோலக் கிருஷ்ணகிரியில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவனே தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரே நாளில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள இந்த 12 படுகொலைச் சம்பவங்கள் குறித்து அந்தந்த மாவட்டக் காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மாநிலத்தில் போதைப்பொருட்களின் நடமாட்டம் மற்றும் முன்விரோதக் கலாச்சாரம் அதிகரித்து வருவதே இந்த குற்றங்களுக்குக் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளன.