போதைப்பொருட்களின் தலைநகரா தமிழகம்?! குடோனில் பதுக்கிய 100 கிலோ கஞ்சா பறிமுதல்!

 

தமிழகம் போதைப் பொருட்களின் தலைநகராக மாறி வருகிறதோ என்கிற ஐயம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இது குறித்த அதிருப்தியை சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். கோவையில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 100 கிலோ கஞ்சாவைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

குனியமுத்தூர் - இடையர்பாளையம் சாலையில் உள்ள ஒரு குடோனில் சட்டவிரோதமாகக் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான தனிப்படை போலீசார் இன்று அதிகாலை அந்த குடோனில் திடீர் சோதனை நடத்தினர்.

வழக்கமாகக் கறிவேப்பிலை சேமித்து வைக்கப்படும் அந்த குடோனில், மறைமுகமாகப் பொட்டலம் போடப்பட்ட நிலையில் சுமார் 100 கிலோ கஞ்சா பதுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சந்தை மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய கேரள மாநிலம் ஆலுவாவைச் சேர்ந்த நவ்பல் (53), கோவை உக்கடம் அருகே உள்ள அன்பு நகரைச் சேர்ந்த அப்பாஸ் (37), கோவை வெள்ளலூர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த பென்னி ஜேக்கப் (36), கோவை போத்தனூர் மேட்டுத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ரூபன் மார்ஷல் (29) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் 

கைது செய்யப்பட்டவர்கள் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து இந்தக் கஞ்சாவை விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? இதன் பின்னணியில் உள்ள பெரிய நெட்வொர்க் எது? என்பது குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.