உடைகிறதா திமுக - காங்கிரஸ் கூட்டணி... நாளையுடன் முடியும் வேட்புமனுத் தாக்கல்... இன்னும் புதுவையில் தொகுதி பங்கீடு இழுப்பறி!
Mar 22, 2026, 12:05 IST
புதுச்சேரி சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (மார்ச் 23) நிறைவடைய உள்ள நிலையில், ஆளும் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாமல் நீடிக்கும் இழுபறி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளை வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என்பதால், இன்று மாலைக்குள் ஒரு முடிவை எட்ட வேண்டிய கட்டாயத்தில் இரு கட்சிகளும் உள்ளன. கூட்டணியில் யார் தலைமை வகிப்பது மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
திமுக இந்த முறை புதுச்சேரியில் கூடுதல் தொகுதிகளைக் கேட்டு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் தனது செல்வாக்குமிக்க இடங்களை விட்டுக்கொடுக்க மறுக்கிறது. திமுக ஒருபுறம் இந்திய கம்யூனிஸ்டு (CPI) மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுடன் தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தியது காங்கிரஸை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
நேற்று இரவு புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் பேச்சுவார்த்தைக்காக திமுக பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. தலைமையில் திமுக குழுவினர் காத்திருந்தனர். காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் இரவு 10 மணி வரை அவர்கள் வரவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஜெகத்ரட்சகன், மாநில அமைப்பாளர் சிவாவுடன் அவசரமாக சென்னைக்கு விரைந்துள்ளார். இது குறித்து திமுக தலைமைக்கு அறிக்கை அளிக்க உள்ளதாகத் தெரிகிறது.