ஹோட்டலில் உணவு தரமில்லையா? கலப்படமா? சமையலறை அசுத்தமா? - மொபைல் ஆப் மூலம் புகாரளிக்க FSSAI அறிவிப்பு; ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டுக்கு நோட்டீஸ்!

 

இந்தியாவில் பாதுகாப்பற்ற உணவுப் பொருட்களின் சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் நுகர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நுகர்வோர்கள் தங்களுக்குத் தெரியவரும் பாதுகாப்பற்ற உணவு விநியோகம், சுகாதாரமற்ற சமையலறைகள் மற்றும் முறையற்ற உணவு கையாளுதல் நடைமுறைகள் குறித்துத் தங்களது மொபைல் செயலி மூலம் புகாரளிக்குமாறு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அழைப்பு விடுத்துள்ளது.

உணவுப் பாதுகாப்புத் தரங்களை நாடு முழுவதும் வலுப்படுத்தும் நோக்கில் FSSAI தனது எக்ஸ் தளப் பக்கத்தில் விழிப்புணர்வுப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "பொதுமக்களாகிய நீங்கள் கவனிப்பதோடு மட்டும் நின்றுவிடாதீர்கள், உடனடியாகப் புகாரளியுங்கள்! ஏனெனில், பாதுகாப்பற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் தரமற்ற உணவு விநியோகம் சமூகத்தில் உள்ள அனைவரையும் நேரடியாகப் பாதிக்கின்றன. ஆணையத்தின் அதிகாரப்பூர்வ 'உணவுப் பாதுகாப்பு இணைப்புச் செயலி' மூலம் உங்களது விழிப்புணர்வை உடனடிச் செயலாக மாற்றுங்கள்."

Don't just notice it, report it!

Unsafe food practices affect everyone. Turn your awareness into action with the #FoodSafetyConnectApp.

Download 👇🏻https://t.co/ZDSzYMRMW3https://t.co/XM5HbtlYC0 pic.twitter.com/kBtsx7HfCr

— FSSAI (@fssaiindia) July 12, 2026


பாதுகாப்பற்ற உணவின் புழக்கத்தைத் தடுப்பதற்காக, FSSAI தனது நாடு தழுவிய உணவுப் பாதுகாப்பு ஆய்வுகள், புகார்களைப் பெறுதல் மற்றும் சட்டப்பூர்வ ஒழுங்குமுறை நடவடிக்கைகளை தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது. உணவுப் பாதுகாப்புத் துறையின் தீவிர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இயங்கி வந்த ஒரு மசாலாப் பொருட்கள் தயாரிக்கும் உற்பத்தி ஆலை மீது அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

அந்த ஆய்வின் போது ஆலையில் கடுமையான விதிமுறை மீறல்களும், சுகாதாரமற்ற சூழலும் நிலவுவது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த மசாலா ஆலையை உடனடியாக மூடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும், அங்கிருந்த கலப்படம் செய்யப்பட்ட பெருமளவிலான மசாலாப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சட்டப்பூர்வ ஆய்வகப் பரிசோதனைக்காக அவற்றின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன.

மளிகைப் பொருட்கள் விநியோக தளமான ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் நிறுவனத்தின் மீது நுகர்வோர்கள் அளித்த அடுக்கடுக்கான புகார்களைத் தொடர்ந்து, சனிக்கிழமையன்று FSSAI அந்த நிறுவனத்திற்கு 9 நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது.

காலாவதியான, கெட்டுப்போன மற்றும் அசுத்தமான உணவுப் பொருட்களை விநியோகித்தது, அழுகிய முட்டைகளை வழங்கியது, காலாவதியான வே புரோட்டீன் மற்றும் சேதமடைந்த பாக்கெட் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விநியோகித்தது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இது தவிர,உரிம முறைகேடுகள், போலி, தவறான FSSAI உரிம விபரங்களைக் குறிப்பிட்டது, விற்பனையாளர் விதிமுறைகளைப் பின்பற்றுவதில் உள்ள குறைபாடுகள் மற்றும் நுகர்வோரின் குறைகளைத் தீர்ப்பதில் உள்ள குளறுபடிகள் ஆகியவற்றை ஒழுங்குமுறை ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் நிறுவனத்தின் உணவுப் பாதுகாப்பு, தர உறுதிப்பாட்டுத் தன்மைகள், சரக்கு மேலாண்மை நடைமுறைகள், சுகாதாரம் மற்றும் தவறுகளைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்க அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு FSSAI உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்த அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறினால், 2006-ஆம் ஆண்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையம் எச்சரித்துள்ளது.

இந்த நோட்டீஸ் குறித்து விளக்கம் அளித்துள்ள ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் நிர்வாகம், "ஆணையத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள புகார்ப் பட்டியல்களை நாங்கள் தீவிரமாக மறுஆய்வு செய்து வருகிறோம். இப்பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வுகாண உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறோம்" என்று தெரிவித்துள்ளது.