20 லட்சம் பேருக்கு 'ஆப்பு' வைக்கிறதா தவெக அரசு? - ரேஷன் கார்டுதாரர்களுக்கு வரப்போகும் புதிய கட்டுப்பாடுகள்! 

 

தமிழகத்தில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களில் சுமார் 20 லட்சம் பேர் தொடர்ந்து பொருட்களை வாங்காமல், சலுகைகளை மட்டுமே பெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, ரேஷன் திட்டத்தில் முறைகேடுகளைத் தவிர்க்க விஜய் தலைமையிலான தவெக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் தற்போது சுமார் 2.28 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இந்த கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி, மலிவு விலை பருப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக, ஒரு ரேஷன் கார்டுக்கு ஆண்டுக்குச் சராசரியாக ரூ.1,000 வரை தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து செலவழித்து வருகிறது.

இந்நிலையில், உணவுப் பொருள் வழங்கல் துறை நடத்திய சமீபத்திய ஆய்வில், தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த கார்டுதாரர்களில் சுமார் 20 லட்சம் கார்டுதாரர்கள், தங்களுக்குரிய மாதப்பொருட்களை ரேஷன் கடைகளுக்குச் சென்று வாங்குவதே இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு, பொங்கல் ரொக்கப் பணம் மற்றும் இதர சிறப்பு நிதியுதவிகள் போன்ற சலுகைகளை மட்டுமே தங்களின் ரேஷன் கார்டுகள் மூலம் பெற்றுப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இதர மாதங்களில் அத்தியாவசியப் பொருட்களை வாங்காமல் அப்படியே விட்டுவிடுகின்றனர். இப்படிப் பொருட்களை வாங்காமல் சலுகைகளை மட்டும் அனுபவிப்பவர்களால் அரசுக்கு வீண் பண விரயம் ஏற்படுவதோடு, ரேஷன் விநியோகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடக்கவும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

இதனைத் தடுத்து, உண்மையான ஏழை எளிய மற்றும் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு மட்டுமே ரேஷன் திட்டத்தின் முழுப் பலன்களும் சென்றடைய வேண்டும் என்பதில் முதல்வர் விஜய் உறுதியாக உள்ளார். இதன் காரணமாக, தொடர்ந்து குறிப்பிட்ட மாதங்கள் பொருட்கள் வாங்காத கார்டுகளைக் கண்டறிந்து, அவற்றின் மீது புதிய கட்டுப்பாடுகளை விதிக்க அல்லது தகுதி நீக்கம் செய்யத் தற்பொழுது தவெக அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.