"சிங்கப்பெண் படை பெயரளவில் தான் இருக்கிறதா?" - புதுக்கோட்டை வன்கொடுமை சம்பவத்திற்கு டிடிவி கண்டனம்!

 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரச் சம்பவத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை இந்தச் சம்பவம் காட்டுவதாக விமர்சித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தில், வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், சமூக விரோதிகள் சிலரால் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்துத் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஆளும் தவெக அரசின் கீழ் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். "தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தவெக அரசால் பெரும் விளம்பரங்களுடன் அறிவிக்கப்பட்ட 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' தற்போது எங்கே இருக்கிறது? அது வெறும் பெயரளவிலேயே இயங்குகிறதோ என்ற பலத்த சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்குக் கூடப் பாதுகாப்பு வழங்க முடியாத அவல நிலையில் தான் இன்றைய காவல்துறை உள்ளதா? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துவிட்டதையே இது காட்டுகிறது" என்று அவர் சாடியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய மருத்துவச் சிகிச்சையும், சட்ட உதவியும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும், இந்த அராஜகத்தில் ஈடுபட்ட காமக் கொடூரர்களைக் காலதாமதமின்றி கைது செய்து, அவர்களுக்கு நீதிமன்றம் மூலம் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.