லிஸ்ட் பெருசா போகுதே?! - இபிஎஸ் கூட்டத்தைப் புறக்கணித்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி!

 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று  நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை, அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி புறக்கணித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து வரும் வேளையில், இந்தச் சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் தேர்தல் தோல்வி மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க எடப்பாடி பழனிசாமி இன்று கூட்டத்தைக் கூட்டியிருந்தார். ஆனால், இந்தக் கூட்டத்தில் கே.சி.வீரமணி பங்கேற்கவில்லை. 

கடந்த சில காலமாகவே எடப்பாடி பழனிசாமியின் தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராகக் கே.சி.வீரமணி செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவரிடமிருந்த செல்வாக்கு மிக்க மாவட்டச் செயலாளர் பதவி அண்மையில் இபிஎஸ்-ஆல் பறிக்கப்பட்டது.

மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதற்குப் பதிலாக, அவருக்குக் கட்சியில் 'அமைப்புச் செயலாளர்' என்ற புதிய பொறுப்பு வழங்கப்பட்டது. இருப்பினும், "தமக்கு வழங்கப்பட்ட இந்த மாற்றுப் பதவியை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கே.சி.வீரமணி ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினரான கே.பி.எஸ்.ராஜா அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்த அதே நாளில், கட்சியின் மற்றொரு முக்கியத் தூணான முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியும் இபிஎஸ் நடத்திய கூட்டத்தைப் புறக்கணித்திருப்பது கட்சியின் உட்கட்சிப் பூசலை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. வேலூர் மண்டல அதிமுகவில் மிக முக்கியப் புள்ளியாகக் கருதப்படும் கே.சி.வீரமணியின் இந்த அடுத்தடுத்த அதிருப்தி நடவடிக்கைகள், எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு மேலும் ஒரு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.