தேர்தல் இலவசங்களுக்குத் தடையா? இன்று உச்ச நீதிமன்றத்தில் முக்கிய விசாரணை!
தேர்தல் நேரங்களில் வாக்காளர்களைக் கவரும் வகையில் மிக்ஸி, கிரைண்டர், இலவச மின்சாரம் மற்றும் ரொக்கப் பணம் போன்ற 'அறிவற்ற இலவசங்களை' அறிவிக்கும் கட்சிகளின் சின்னத்தைப் பறிக்க வேண்டும் அல்லது அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி இந்தப் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின் போது, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, "வருவாய் பற்றாக்குறை உள்ள மாநிலங்கள் கூட இத்தகைய இலவசங்களை வாரி வழங்குவது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும்" என்று கடும் அதிருப்தி தெரிவித்தது.
இலவச மின்சாரம் போன்ற அறிவிப்புகள் மின் விநியோக நிறுவனங்களைப் பாதிப்பதோடு, உள்கட்டமைப்பு மற்றும் கல்வி போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கான நிதியை முடக்குவதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
இன்று நடைபெறும் விசாரணையில், மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் இது குறித்துத் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கலாம். குறிப்பாக, தேர்தல் அறிக்கைகளில் உள்ள வாக்குறுதிகளை முறைப்படுத்துவது குறித்து முக்கிய வழிகாட்டுதல்கள் ஏதேனும் வெளியாகுமா என்பது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
"அரசின் கடமை சாலைகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளைக் கட்டுவதா அல்லது தேர்தலுக்காக ஸ்கூட்டி மற்றும் உணவுகளை இலவசமாக வழங்குவதா?" என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இன்று வெளியாகும் உத்தரவுகள் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.