தமிழகத்தில் 4 நாள் தொடர் விடுமுறைக்கு வாய்ப்பு?! டிக்கெட் புக் பண்ணியாச்சா?
தமிழகத்தில் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறைக்கு வாய்ப்பு உருவாகியிருக்கிறது. முன்கூட்டியே உங்கள் பயண திட்டத்தைப் ப்ளாண் பண்ணிக்கோங்க. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு அன்று ஒருநாள் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் ஏப்ரல் 23ம் தேதி விடுமுறை பொருந்தும். தேர்தல் வாக்குப்பதிவு நாள் வியாழக்கிழமை வருவதால், சென்னையில் இருந்தும் மற்ற நகரங்களில் இருந்தும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக, போக்குவரத்துத் துறை சார்பில் ஆயிரக்கணக்கான சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவுக்கு அடுத்த தினம் ஏப்ரல் 24ம் தேதி வெள்ளிக்கிழமை. சொந்த ஊருக்கு வாக்களிக்க செல்பவர்கள், மீண்டும் பணியிடங்களுக்கு திரும்ப வசதியாக ஏப்ரல் 24ம் தேதி விடுமுறை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பலரும் ஒரே நாளில் தென்மாவட்டங்களுக்கு சென்று, மீண்டும் திரும்புவது கடினம் என்பதால் இப்போதில் இருந்தே விடுமுறைக்கு விண்ணப்பிக்க துவங்கி இருக்கின்றனர். இந்நிலையில் அதற்கடுத்த தினங்களான ஏப்ரல் 25, 26 (சனி, ஞாயிறு) வார இறுதி விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமை ஒருநாள் விடுப்பு எடுப்பவர்களுக்குத் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.
வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் தேர்தல் நடைபெற அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும் தீவிரப்படுத்தியுள்ளது.