தவெக-விற்கு ஆதரவு இல்லை? சிபிஎம் சண்முகம் பதில்!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாகத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மைக்குக் கூடுதல் ஆதரவு தேவைப்படுகிறது. இந்நிலையில், சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர் சண்முகம் அளித்துள்ள பேட்டி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்கள், "புதிய அரசுக்கு (தவெக) நீங்கள் ஆதரவு அளிப்பீர்களா? அவர்களுக்குப் பெரும்பான்மை கிடைக்குமா?" எனக் கேள்வி எழுப்பினர்.
இந்தக் கேள்விக்குத் தனது பாணியில் பதிலளித்த சிபிஎம் தலைவர் சண்முகம், "புதிய அரசுக்கு பெரும்பான்மை கிடைக்குமா இல்லையா என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நீங்கள் தவறான இடத்தில் வந்து இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்."
இந்த பதில் மூலம், தவெக-விற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதிலோ அல்லது அமைச்சரவையில் இடம்பெறுவதிலோ தங்களுக்குத் தற்போதைக்கு விருப்பம் இல்லை என்பதை அவர் சூசகமாக உணர்த்தியுள்ளார்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக ஆகியவை தவெக-விற்கு ஆதரவு அளித்து, தமிழகத்தில் முதல்முறையாக ஒரு 'கூட்டணி அமைச்சரவையில்' இடம்பெற வாய்ப்புள்ளதாகப் பேசப்பட்டது. ஆனால், சண்முகத்தின் இந்தப் பேச்சு அத்தகைய யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் அமைந்துள்ளது. தவெக தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், ஆட்சியமைக்க இன்னும் சில இடங்கள் தேவைப்படும் நிலையில், இடதுசாரிகளின் இந்த நிலைப்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.