இப்படியெல்லாமா நடக்கும்?! - திருமண இசைக் கச்சேரியால் பறிபோன 140 உயிர்!

 

இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்று அந்த திருமண நிகழ்வில் கலந்துக் கொண்டவர்கள் இன்னமும் ஆச்சர்யம் விலகாமல் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்படியென்ன துயரம் நிகழ்ந்தது. ஒரே நேரத்தில் 140 உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது ஒரு திருமண நிகழ்ச்சி.

உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் வளர்க்கப்பட்டு வந்த 140 கோழிகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பண்ணையின் உரிமையாளரான சபீர் அலி என்பவர் தனது கோழிகளின் இறப்பிற்கு அருகில் சென்ற திருமண ஊர்வலமே காரணம் என காவல்துறையிடம் அதிரடி புகார் அளித்துள்ளார்.

திருமண ஊர்வலத்தில் பயன்படுத்தப்பட்ட டிஜே இசைக் கருவியிலிருந்து வெளியான அதீத சத்தத்தின் காரணமாக தனது பண்ணையில் வளர்த்து வரும் கோழிகள் உயிரிழந்ததாக அவர் அந்தப் புகாரில் குறிப்பிட்டு அதிர வைத்திருக்கிறார்.

 ராம் பத்ர பூர்வா கிராமத்தைச் சேர்ந்த பப்பன் விஸ்வகர்மா என்பவரது மகளின் திருமண ஊர்வலம் இரவு 9:30 மணியளவில் சபீர் அலியின் கோழிப்பண்ணை வழியாகக் கடந்து சென்றுள்ளது. அப்போது ஊர்வலத்தில் வைக்கப்பட்டிருந்த இசைக்கருவியில் இருந்து மிக அதிக அளவிலான ஒலி எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த இரைச்சலைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பண்ணையில் இருந்த கோழிகள் கடும் பீதி அடைந்ததாகவும், அதன் விளைவாகவே அவை ஒவ்வொன்றாக மயங்கி விழுந்து உயிரிழந்ததாகவும் பண்ணை உரிமையாளர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தனது வாழ்வாதாரமாக இருந்த 140 கோழிகள் இறந்து விட்டதால் தனக்கு நேர்ந்த நஷ்டத்திற்கு ஈடுசெய்து தர வேண்டும் எனச் சபீர் அலி தனது புகார் மனுவில் வலியுறுத்தியுள்ளார். பொதுவாக அதிகப்படியான சத்தம் கோழிகளுக்கு இதய அழுத்தத்தை ஏற்படுத்தும் எனப் பண்ணை உரிமையாளர்கள் கூறி வரும் நிலையில், இந்த வினோதப் புகார் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கிராமப் பகுதியில் திருமணக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட இந்தச் சம்பவம் தற்போது அந்த மாவட்டம் முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.