திரையில் ஹீரோவாகவும், ஆட்சியில் ஜீரோவாகவும் இருப்பது வெட்கமாக இல்லையா? - முன்னாள் சபாநாயகர் அப்பாவு ஆவேசம்!
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், தொடரும் குற்றச் சம்பவங்கள் மற்றும் தவெக நிர்வாகிகளின் தொடர் கைதுகள் குறித்து முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது சமூக வலைதளப் பக்கத்தில் முதலமைச்சரை நோக்கி கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி, காசிமேடு, பூந்தமல்லி, சேலம், ஆலந்தூர் மற்றும் தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தவெக நிர்வாகிகளும் விஜய் ரசிகர்களும் பாலியல் வன்கொடுமை, வழிப்பறி, கஞ்சா கடத்தல், ஆன்லைன் லாட்டரி விற்பனை மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி போன்ற தீவிரக் குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அவர் பட்டியலிட்டுள்ளார்.
தவெக ஆட்சி அமைந்து முதல் 100 நாட்களில் நடந்துவரும் இதுபோன்ற குற்றச் சம்பவங்களால் தமிழக பெண்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு என்னவென்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திரைப் படங்களில் விஜய் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதைப் பார்த்துவிட்டு, இளைஞர்களும் அதே வழியில் நடக்க முயல்வதைக் கண்டு முதலமைச்சர் ரசித்துக்கொண்டிருக்கிறாரா என்றும் அவர் சாடியுள்ளார். குற்றச் செயல்களில் ஈடுபடும் தனது கட்சியினரையும் ரசிகர்களையும் கண்டித்துத் திருத்த வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு உண்டு என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், திரையில் 'ஹீரோவாகவும்' ஆட்சியில் 'ஜீரோவாகவும்' இருப்பது வெட்கமாக இல்லையா என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.