"கண்டும் காணாமல் இருந்தால் அயோக்கியத்தனம் இல்லையா?" - வைகோவுக்கு தமிழிசை சுளீர் கேள்வி!

 

"கூட்டணியில் இருந்து கொண்டு ஆளுங்கட்சியின் ஊழல்களைக் கண்டும் காணாமல் இருப்பது அயோக்கியத்தனம் இல்லையா?" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

முன்னதாகப் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பெருமளவில் முறைகேடுகளும், லஞ்சப் பரிமாற்றங்களும் நடைபெற்றதாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

கடந்த திமுக ஆட்சி என்பது 'கரப்ஷன் மற்றும் கமிஷன்' ஆட்சியாகவே இருந்தது என்று வைகோ நேரடியாகக் குற்றம் சாட்டினார். வைகோவின் இந்த பேட்டியைக் கேட்ட செய்தியாளர்கள், "அப்படியென்றால் திமுக ஆட்சியில் இவ்வளவு முறைகேடுகள் நடந்தபோது, கூட்டணியில் இருந்த நீங்கள் ஏன் அப்போதே அதனைத் தட்டிக்கேட்கவில்லை?" என்று கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த வைகோ, "ஆளுங்கட்சியுடன் கூட்டணியில் இருந்து கொண்டே அவர்களின் தவறுகளை அப்போதே வெளியே பொதுவெளியில் பேசிக் கேட்டால், அதுதான் அரசியல் அயோக்கியத்தனம்" என்று விளக்கம் அளித்திருந்தார்.

வைகோவின் இந்த விளக்கத்திற்குத் தனது 'எக்ஸ்' சமூக வலைதளப் பதிவு மூலம் கடுமையான கண்டனங்களையும் கேள்விகளையும் தமிழிசை சௌந்தரராஜன் முன்வைத்துள்ளார்:

"கடந்த திமுக ஆட்சியில் ஊழல், கமிஷன் என அனைத்தும் நடந்ததாக நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள். ஆனால், கூட்டணியில் இருந்து கொண்டு அதனைக் கேட்டால் அது அயோக்கியத்தனம் என்கிறீர்கள். அப்படியென்றால், ஆளுங்கட்சியின் ஊழல்களைக் கண்ணெதிரே கண்டும் காணாமல், மக்கள் பணத்தைச் சூறையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு கூட்டணியில் நீடித்தீர்களே, அது மிகப்பெரிய அயோக்கியத்தனம் இல்லையா?"

முந்தைய திமுக ஆட்சியின் ஊழல்கள் குறித்து வைகோ மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் இடையே வெடித்துள்ள இந்த  அரசியல் விவாதம், தமிழகக் கூட்டணி அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.