காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்... 12 பேர் பலி - 72,500யைத் தாண்டியது உயிரிழப்பு!
சர்வதேச நாடுகளின் போர் நிறுத்த கோரிக்கைகளை மீறி, காசா முனையில் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தனது கோரத் தாண்டவத்தை அரங்கேற்றியுள்ளது. நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், 6 காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் உட்பட மொத்தம் 12 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியில் சென்ற போலீஸ் ரோந்து வாகனத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலே இந்த உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதல் குறித்து ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சர்வதேச சமூகம் காசாவில் போர் நிறுத்தத்தைக் கொண்டு வருவதில் முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டது. அப்பாவி மக்களையும், பொது அமைதியைப் பேணும் போலீசாரையும் குறிவைத்து இஸ்ரேல் தாக்குவது அதன் பாசிச முகத்தையே காட்டுகிறது" என்று கடுமையாகச் சாடியுள்ளது.
கடந்த 2023 அக்டோபர் முதல் தொடர்ந்து வரும் இந்தப் போரில், இதுவரை உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 72,500-ஐக் கடந்துள்ளதாகவும், 1.72 லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் இந்தத் திடீர் தாக்குதல்களால் காசாவின் வடக்குப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் உருக்குலைந்துள்ளன. போர் நிறுத்த ஒப்பந்தங்கள் அவ்வப்போது பேசப்பட்டாலும், களத்தில் குண்டு மழை பொழிவது மட்டும் நின்றபாடில்லை.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஐநா சபை மீண்டும் மீண்டும் அபாய எச்சரிக்கை விடுத்தாலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.
போர் மேகங்கள் சூழ்ந்துள்ள காசாவில், அடுத்தடுத்த தாக்குதல்கள் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்ற அச்சத்தில் மக்கள் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.