இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி பிரான்ஸ் நாட்டுக்குள் நுழைய தடை!
காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற சர்வதேசக் கப்பல் குழுவினர் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய அத்துமீறல் மற்றும் அவர்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்திய விவகாரம் உலக அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேலின் தீவிர வலதுசாரி கொள்கை கொண்ட தேசிய பாதுகாப்புத்துறை மந்திரி இதாமர் பென்-கிவீர் பிரான்ஸ் நாட்டிற்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. காசாவில் நிலவும் கடுமையான பசிப்பிணியைப் போக்க, 'குளோபல் சுமூத்' என்ற பெயரில் 44 நாடுகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கப்பல்கள் மூலம் மனிதாபிமான உதவிகளை எடுத்துச் சென்றனர்.
சர்வதேசக் கடல் எல்லையில் வைத்து இக்கப்பல்களை இடைமறித்த இஸ்ரேல் கடற்படை, அதில் இருந்த பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களைக் கொடூரமாகக் கைது செய்து அஸ்தோத் துறைமுக சிறைக்குக் கொண்டு சென்றது. இந்தச் சூழலில், இஸ்ரேல் மந்திரி இதாமர் பென்-கிவீர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அதில், கைது செய்யப்பட்ட ஐரோப்பிய மற்றும் பிரான்ஸ் நாட்டு குடிமக்களின் கைகள் கட்டப்பட்டு, அவர்கள் மண்டியிட வைக்கப்பட்டு அவமானப்படுத்தப்படும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த வீடியோ சர்வதேச அளவில் பெரும் அவமதிப்பாகப் பார்க்கப்பட்டு, உலக நாடுகளின் கோபத்தைத் தூண்டியது.
மனிதாபிமானப் பணியில் ஈடுபட்ட தங்களது நாட்டு குடிமக்கள் மிகக் கேவலமாக நடத்தப்பட்டதைக் கண்டு பிரான்ஸ் அரசு கடும் அதிர்ச்சியடைந்தது. இதனைத் தொடர்ந்து, பிரான்ஸ் வெளியுறவு மந்திரி ஜீன்-நோல் பரோட் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் இதாமர் பென்-கிவீருக்குத் தடை விதிக்கும் உத்தரவை வெளியிட்டார்:
"பிரான்ஸ் மற்றும் ஐரோப்பியக் குடிமக்கள் ஒரு பொது அதிகாரியால் இந்த அளவிற்கு மிரட்டப்படுவதையும், வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதையும் எங்களால் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. இதன் காரணமாக, இன்றைய தினம் முதல் இஸ்ரேல் மந்திரி இதாமர் பென்-கிவீர் பிரான்ஸ் நாட்டு எல்லைக்குள் நுழைவதற்கு முழுமையாகத் தடை விதிக்கப்படுகிறது."
பிரான்ஸ் அரசு பென்-கிவீருக்குத் தடை விதித்ததோடு மட்டுமல்லாமல், பிரான்ஸிற்கான இஸ்ரேல் தூதரை நேரில் அழைத்துத் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது. மேலும், மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிய மந்திரி பென்-கிவீர் மீது ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து கடுமையான பொருளாதார மற்றும் பயணத் தடைகளை விதிக்க வேண்டும் என்றும் பிரான்ஸ் வெளியுறவு மந்திரி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகள் பென்-கிவீருக்கு எதிராகப் பல்வேறு தடைகளை விதித்துள்ள நிலையில், தற்பொழுது பிரான்ஸ் நாடும் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்திருப்பது இஸ்ரேல் அரசுக்கு சர்வதேச அளவில் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.