இஸ்ரேல் மீதான தாக்குதல் நிறுத்தம்... ஈரான் அதிரடி அறிவிப்பு!
மத்திய கிழக்கு பகுதியில் நீண்ட நாட்களாகப் பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில், இஸ்ரேல் நாட்டின் மீதான தனது ஏவுகணை மற்றும் ஆயுதத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஈரான் இராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உலக நாடுகளிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தத் தாக்குதல் நிறுத்தம் ஒரு எச்சரிக்கையுடன் கூடிய தற்காலிகமான முடிவு மட்டுமே என்று ஈரானிய இராணுவக் கட்டுப்பாட்டு மையம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. லெபனான் நாட்டின் தெற்குப் பகுதி மற்றும் தங்களின் எல்லைப் பகுதிகளில் இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதில்டியாக இதைவிடப் பல மடங்கு கடுமையான மற்றும் பேரழிவை ஏற்படுத்தும் தாக்குதல்களை இஸ்ரேல் எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
மறுபுறம், இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் தனது ஏவுகணைத் தாக்குதல்களை நிறுத்தியுள்ளது நல்லதொரு தொடக்கம் என்று கூறியுள்ளார். மேலும், இரு நாடுகளும் உடனடியாகப் போரை முழுமையாக நிறுத்திவிட்டு, அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மத்திய கிழக்கில் நிரந்தர அமைதி ஏற்படப் புதிய அணுசக்தி ஒப்பந்தங்கள் மற்றும் பொருளாதாரக் கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.