ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தயாரிப்பை தனியாரிடம் ஒப்படைக்கிறது இஸ்ரோ!

 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ராக்கெட்டுகள் மற்றும் வழக்கமான செயற்கைக்கோள்கள் தயாரிக்கும் பணியிலிருந்து படிப்படியாக விலகி, அவற்றை முழுமையாகத் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்திய விண்வெளித் துறையைத் தனியாருக்குத் திறந்துவிடும் கொள்கையின் கீழ், தயாரிப்புப் பணிகளைத் தனியாரிடம் வழங்கிவிட்டு, இஸ்ரோ தனது முழு கவனத்தையும் புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களில் செலுத்த முடிவு செய்துள்ளது.

சிறிய செயற்கைக்கோள்களை ஏந்திச் செல்லும் 'எஸ்.எஸ்.எல்.வி' ராக்கெட் தயாரிப்புத் தொழில்நுட்பத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதன் மூலம் இந்த மாற்றம் தற்போது தொடங்கியுள்ளது. எஸ்.எஸ்.எல்.வி-யைத் தொடர்ந்து, இஸ்ரோவின் நம்பிக்கைமிக்க பி.எஸ்.எல்.வி மற்றும் பிரம்மாண்டமான எல்.வி.எம்-3 ஆகிய ராக்கெட்டுகளின் தயாரிப்பும் அடுத்தகட்டமாகத் தனியார் அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் தலைவர் பவன் கோயங்கா இதுகுறித்துப் பேசுகையில், "இந்திய விண்வெளித் துறையை உலகளவில் விரிவுபடுத்தவும், ராக்கெட் உற்பத்தியை வேகப்படுத்தவும் இதற்கான முதற்கட்டப் பணிகள் ஏற்கனவே வெற்றிகரமாகத் தொடங்கிவிட்டன" என்று தெரிவித்துள்ளார்.