“இஸ்ரோ தனியார் மயமாகாது...” - ஊழியர் சங்கங்களின் கவலைக்கு இஸ்ரோ அதிகாரப்பூர்வ விளக்கம்!

 

இஸ்ரோவின் ராக்கெட் தயாரிப்பு மற்றும் ஏவுதள செயல்பாடுகள் தனியாருக்கு மாற்றப்படுவதாக எழுந்த கவலைகளைத் தொடர்ந்து, இஸ்ரோ நிர்வாகம் இதுகுறித்து அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது.

இஸ்ரோவின் 9 ஊழியர் சங்கங்கள் சார்பில், இஸ்ரோ தலைவர் வி.நாராயணனிடம் கடந்த 4-ஆம் தேதி அதிகாரப்பூர்வ விளக்கம் கோரி கடிதம் ஒன்று எழுதப்பட்டது. அதில் இஸ்ரோவின் எதிர்கால பங்கு, தற்போதைய ஊழியர்களுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் எதிர்கால ஆட்சேர்ப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.

ஊழியர்களின் கவலைக்குப் பதிலளிக்கும் வகையில் இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் முக்கிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அதில், "இஸ்ரோ தனியார் மயமாக்கப்படாது; அதன் முக்கியத்துவம் எந்த வகையிலும் குறைக்கப்படாது" என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

எதிர்கால விண்வெளித் திட்டங்களில் இஸ்ரோவின் பங்கு மேலும் வலுப்படுத்தப்படும் என்றும், ஏற்கனவே உள்ள தொழில்நுட்பங்களை மட்டும் தொழில்துறை அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் போட்டி முறையில் உற்பத்தி செய்யலாம் என்றும் விளக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கிடைக்கும் அறிவியல் மனிதவளத்தையும் வளங்களையும் புதிய தொழில்நுட்பங்கள், சந்திரன் மற்றும் கோள்கள் ஆய்வில் முழுமையாகப் பயன்படுத்த முடியும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.