நிலவில் 250 முறை திடீர் நில அதிர்வு... இஸ்ரோ ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள்!
நிலவு முற்றிலும் அமைதியான துணைக்கோள் என்ற பொதுவான நம்பிக்கை நிலவி வந்த சூழலில், அதற்கு மாறாக அங்குத் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, நிலவின் தென்துருவத்திற்குச் சந்திரயான்-3 விண்கலன் மூலமாக விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக அனுப்பி ஆய்வு நடத்தியது. லேண்டர் தரை இறங்கிய 'சிவசக்தி' பகுதியில் இருந்து பிரக்யான் ரோவர் ஆய்வுக்கருவி தொடர்ந்து பல்வேறு முக்கியத் தகவல்களையும் பல அரிய புகைப்படங்களையும் பூமிக்கு அனுப்பி வந்தது. அதில் சிவசக்தி பகுதியில் மட்டும் 250-க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக இஸ்ரோவின் ஆய்வில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலவில் பதிவான அதிர்வுகள் பெரும்பாலும் சிறிய அளவிலானவை என்ற போதிலும், அவற்றில் சில அதிர்வுகள் பல மணி நேரம் வரை நீடித்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் நிலவின் மேற்பரப்பில் 10 சென்டிமீட்டர் ஆழம் வரை மண் பகுதியானது வெப்பத்தைக் கடத்தாத கவசமாகச் செயல்படுவதையும் ஆய்வுக் கருவிகள் உறுதி செய்துள்ளன. ஆழமான மண் அமைப்பில் மெக்னீசியம் தாதுக்கள் அதிக அளவில் இருப்பதையும் சந்திரயான்-3 விண்கலன் மூலம் அனுப்பப்பட்ட அறிவியல் தகவல்கள் தெளிவுபடுத்தியுள்ளன. இதன் மூலம் நிலவு உருவான தொடக்கக் காலத்தில், மெக்னீசியம் ஒரு திரவ பிளாஸ்மாவாகச் செயல்பட்டிருக்கலாம் என்ற புதிய அறிவியல் உண்மை கண்டறியப்பட்டுள்ளது.
விண்வெளி ஆய்வில் வரலாற்றுச் சாதனை படைத்த இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்டம், நிலவின் தோற்றம் குறித்த பல புதிய கதவுகளைத் திறந்து விட்டுள்ளது. நிலவின் உட்புற அமைப்பு மற்றும் தொடர் நில அதிர்வுகளுக்கான துல்லியமான காரணங்களைக் கண்டறியும் பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நிலவின் மேற்பரப்பில் கண்டறியப்பட்ட இந்த அபூர்வ மாற்றங்கள் மற்றும் அதிர்வுகள் உலக நாடுகளின் விண்வெளி மையங்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன.